×

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த விவகாரம்: முதல்வர் எடப்பாடி நேரில் ஆய்வு

கோவை: மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து வீடுகளுக்கு மேல் விழுந்ததில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தற்போது அப்பகுதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். மேட்டுப்பாளையத்தில் நேற்று அதிகாலை ஒரு தனியார் நிறுவனத்தினுடைய சுவர் இடிந்து விழுந்ததில் அருகில் உள்ள 4 வீடுகளை சேர்ந்த 17 பேர் மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து அப்பகுதியில் பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன. இது குறித்த விசாரணை தேவை.  இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அப்பகுதிகளில் 17 பேருக்குமான நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும். அதேபோல இதற்கான உரிய விசாரணை செய்ய வேண்டும்.

இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்னதாகவே இவை எல்லாம் சரியாக கட்டமைக்கப்பட வேண்டும் என்று பல்வேறு போராட்டங்கள் நடந்த நிலையில், தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் பல்வேறு அமைச்சர்களும் அப்பகுதியினை பார்வையிட்டு வருகின்றனர். இதன் பிறகு உயிரிழந்த குடும்பத்தினரை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு அப்பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதலமைச்சர்:

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனையளிக்கிறது என தெரிவித்தார். மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து இறந்த 17 பேர் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும், மேலும் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடு கட்டி தரப்படும் எனவும் அவர் உறுதி அளித்தார். நடூரில் உள்ள ஓட்டு வீடுகளில் வசிப்பவர்களுக்கு குடிசை மாற்றுவாரியம் மூலம் வீடு கட்டித்தரப்படும். இதனை தொடர்ந்து உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரில் ஒருவருக்கு தகுதிக்கு ஏற்ப வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி குறிப்பிட்டார். தமிழகத்தை குடிசை இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என அரசு உறுதி பூண்டுள்ளது. குடிசை இல்லாத மாநிலமாக்க ஒவ்வொரு ஆண்டும் இலக்கு வைத்து கான்கிரீட் வீடுகள் கட்டப்படும். விபத்துக்கு காரணமான மதில் சுவர் கட்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை  எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : wall collapse ,Mettupalayam ,Chief Minister ,Edappadi , Mettupalayam, 17 people, CM Edappadi, study
× RELATED மோடி ஆட்சியை பார்த்து ஐநா சபையே சிரிக்கிறது