×

தொழில்நுட்ப கோளாறால் இரண்டாம் நாளாக முடங்கியுள்ள ஹெச்.டி.எப்.சி வங்கியின் ஆன்லைன் சேவை: வாடிக்கையாளர்கள் சிரமம்!

புதுடெல்லி: தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹெச்.டி.எப்.சி வங்கியின் ஆன்லைன் சேவை இரண்டாம் நாளாக முடங்கியுள்ளதால் வடிக்கையாளர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஹெச்.டி.எப்.சி வங்கியின் நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் சேவை நேற்று முதல் தொழில்நுட்பக் கோளாறின் காரணமாக சரி வர இயங்கவில்லை. இதுகுறித்த புகார்கள் நேற்று சமூக வலைதளங்களில் பரவலாகக் காணப்பட்டன. ஹெச்.டி.எப்.சி வங்கி வாடிக்கையாளர்கள் இதனால் பெரிய சிரமங்களை சந்தித்து வருவதாகவும் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், இதுகுறித்து ஹெச்.டி.எப்.சி வங்கி வெளியிட்டுள்ள விளக்கக் குறிப்பில், தொழில்நுட்பக் கோளாறின் காரணமாக நெட் பேங்கிங் சேவை மற்றும் மொபைல் பேங்கிங் ஆப் சேவை தற்காலிகமாக முடங்கியுள்ளது.

எங்களது தொழில்நுட்ப வல்லுநர்கள் துரித கதியில் செயல்பட்டு வருகின்றனர். இன்னும் சில மணி நேரத்தில் இந்தப் பிரச்னையைத் தீர்த்துவிடுவோம் என நம்புகிறோம். சில வாடிக்கையாளர்கள் நெட்பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் பயன்பாட்டைப் பயன்படுத்தி பரிவர்த்தனை செய்ய முடியும் என்றாலும், ஒரு சிலர் இன்னும் இடைப்பட்ட சிக்கல்களை எதிர்கொண்டிருக்கலாம். எனவே, சிரமத்திற்கு வருந்துகிறோம், என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதத்தின் முதல் வாரத்தில் சம்பளம் வரும் நேரம், மாதாந்திர செலவுகள் உள்ள நேரமாக உள்ள நிலையில், இதுபோன்ற பிரச்னையால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹெச்.டி.எப்.சி வங்கியின் சுமார் 45 மில்லியன் வாடிக்கையாளர்கள் பணப் பரிவர்த்தனைகள் ஏதும் செய்ய முடியாது சிரமப்பட்டு வருகின்றனர்.



Tags : HDFC Bank ,Customers ,Online Service , Technology Disorder, HDFC Bank, Online Service, Net Banking
× RELATED 2 கோடி கிரெடிட் கார்டுகளை வழங்கி எச்டிஎஃப்பசி வங்கி சாதனை..!!