×

ஜோலார்பேட்டை அருகே சேதமடைந்த பள்ளியை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அருகே ஆபத்தான நிலையில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளி கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சியில் உள்ள அசோக்நகர் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியானது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடுநிலையாக இருந்த பள்ளி தற்போது தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளியாக செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளி தற்போது தரம் உயர்த்தப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும் 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்காக புதிய கட்டிடம் கட்டப்படாமல் உள்ளது. மேலும், அந்தப் பள்ளியில் வகுப்பறை கட்டிடமும் போதுமான அளவில் இல்லை. இதனால் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய வகுப்பறை கட்டிடத்தில் 6ம் வகுப்பு மற்றும் 7ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தக் கட்டிடம் உள்பகுதியில் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்தும், வெளிப்பகுதியில் ஆங்காங்கே கட்டிடங்கள் வெடிப்பு ஏற்பட்டு மிகவும் சிதிலமடைந்த நிலையில், கட்டிடத்தில் மரக்கன்றுகள் முளைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. ஜன்னல்கள் உடைந்த நிலையில் கட்டிடத்தின் மேல் புல் செடி, கொடிகள் வளர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனையொட்டி கட்டப்பட்டுள்ள செப்டிக்டேங் குழியை பாதுகாப்பாக மூடப்படாமல் சிமென்ட் பைகள் வைத்து மூடி கல் வைக்கப்பட்டுள்ளதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் துர்நாற்றம் வீசுவதாக  குற்றம்சாட்டுகின்றனர். மேலும் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் சிலர் பள்ளியின் கட்டிடத்துக்குள் நுழைந்து மது அருந்துவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

இங்கு இரவு காவலர், துப்புரவு பணியாளர் போன்றவர்கள் பணியில் அமர்த்தப்படவில்லை.  இதனால் இந்தப்பள்ளியில் கழிவறை, குடிநீர் வசதி அவ்வப்போது பராமரிக்கப்படாததால் பள்ளி மாணவர்களுக்கு நோய் உருவாகும் சூழ்நிலை ஏற்படுவதாகவும், ஆபத்தான நிலையில் உள்ள 2 வகுப்பறையில் மாணவர்கள் கல்வி பயின்று வருவதாகவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டினர். எனவே, ஆபத்தான நிலையில் உள்ள பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் அமைக்க துறை சார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்களும், மாணவர்களின் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Demolition ,school ,Jolarpettai ,building , Jolarpettai
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி