×

ம.ரெட்டியபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பராமரிப்பு குறைவால் பறிபோன அறுவை சிகிச்சை அரங்கம்

திருச்சுழி: திருச்சுழி அருகே, ம.ரெட்டியபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த அறுவை சிகிச்சை அரங்கத்தை கல்லூரணி அரசு மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர். இதனால், கர்ப்பிணிகள் அவதிப்படுகின்றனர். எனவே, மீண்டும் அறுவை அரங்கத்தை கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சுழி அருகே உள்ள ம.ரெட்டியபட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதில், 30 படுக்கைகளுடன் அறுவை அரங்கம் உள்ளது. இந்த நிலையத்தின் கட்டுப்பாட்டில் 23 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. இவைகள் மூலம் 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த கர்ப்பிணிகள் மகப்பேறு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், ம.ரெட்டியபட்டி அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் சுகப்பிரசவம் மற்றும் சிசேரியன் மூலம் குழந்தைகள் பிறந்தன. இந்நிலையில், அரசு ஆரம்ப சுகாதாநிலையத்தை முறையாக பராமரிக்காததாலும், தரமற்ற பணியாலும் கட்டிடங்கள் பூமிக்குள் அரை அடி ஆழத்திற்கு புதைந்தன. கட்டிடங்களில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், மருத்துவமனையில் இருந்த அறுவை அரங்க உபகரணங்களை திருச்சுழி அருகே உள்ள கல்லூரணிக்கு மாற்றியுள்ளனர். இதனால், கர்ப்பிணி தாய்மார்கள் அவதிப்படுகின்றனர். கல்லூரணியில் படுக்கை வசதி குறைந்த அளவே உள்ளது. இதனால், மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிகள்  அருப்புக்கோட்டை, விருதுநகரில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் அவலநிலை உள்ளது.

எனவே, ம.ரெட்டியபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முறையாக பராமரிக்கவும், மீண்டும் அறுவை அரங்கம் தொடங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து ரெட்டியபட்டி மீனாட்சி கூறுகையில், ‘எங்கள் கிராமத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் தினசரி 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனைக்கு பிரசவத்துக்காக கர்ப்பிணிகள் அதிகமாக வருகின்றனர். இங்கிருந்த அறுவை சிகிச்சை அரங்கம் கல்லூரணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டாக கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பிரசவத்துக்கு வருகிற பெண்களை அவசர, அவசரமாக கல்லூரணி மருத்துவமனைக்கு அனுப்புகின்றனர். எனவே, மீண்டும் அறுவை அரங்கம் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : HEALTH CENTER Surgical Theater Operation ,MA RETTYPATTI ,theater , Operation theater
× RELATED ரத்னம் படத்திற்கு தியேட்டர்...