×

தொடர் மழை காரணமாக தமிழகத்தில் 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை: ஆட்சியர்கள் அறிவிப்பு

பெரம்பலூர்: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தாண்டு இயல்பை காட்டிலும் கூடுதலாக மழை பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகம், புதுச்சேரியில் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த இரண்டு நாட்களாக மழை வெளுத்து வாங்க தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழைக் காலத்தில் 40 சென்டி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகி உள்ளதாகவும், தற்போதைய நிலவரப்படி 11 சதவிகிதம் அதிக மழை கிடைத்துள்ளதாகவும் சென்னை வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. எனவே பொதுமக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பு வங்க கடலில் உருவான புயல்கள் தமிழகத்தில் இருந்து நகர்ந்து வடக்கு நோக்கி சென்று விட்டது.

இதனால் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் தமிழகத்தில் குறைந்திருந்ததோடு மட்டுமல்லாமல் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில், குமரிக்கடல்  மற்றும் அதனையொட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கடந்த சில நாட்களாக சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருவது. இந்நிலையில் நேற்றிரவு முதல் மழை பெய்து வருவதால் தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர், ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர், சிதம்பரம், வடலூர் கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Tags : Tamil Nadu ,District Schools Vacation ,District Schools Holidays , Continuous showers, holidays to schools
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...