×

மும்பை விமானம் 8 மணி நேரம் தாமதம் சகோதரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாததால் சென்னை பெண் தவிப்பு : ‘முகத்தை கூட பார்க்க முடியாமல் செய்துவிட்டீர்களே’ என கண்ணீர்

சென்னை: சென்னையில் இருந்து மும்பை செல்லும் கோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று காலை 5 மணிக்கு புறப்பட இருந்தது. அதில் 213 பயணிகள் பயணம் செய்ய வந்திருந்தனர். அனைவரும் அதிகாலை 3.30 மணியில் இருந்து 4 மணிக்குள் சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்கு வந்தனர். ஆனால், திடீரென விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் அதை சரி செய்து காலை 7 மணிக்கு விமானம் மும்பை புறப்படும் என அறிவிக்கப்பட்டது. பிறகு, சிறிது நேரம் கழித்து 8 மணிக்கு என்றும், மீண்டும் 10 மணிக்கு புறப்படும் என்றும் அறிவித்தனர்.இதனால் அதில் செல்ல இருந்த பயணிகள், விமானம் சரியாக 10 மணிக்காவது புறப்பட்டு விடுமா, இல்லை அதற்குமேல் தாமதமாகும் என தெரிந்தால் எங்கள் டிக்கெட்டை ரத்து செய்துவிடுங்கள். நாங்கள் வேறு விமானத்தில் செல்கிறோம் என விமான நிலைய ஊழியர்களிடம் தெரிவித்தனர். ஆனால், அவர்கள் இல்லை இல்லை 10 மணிக்கு சரியாக புறப்பட்டு விடும் என்றனர். அதன்படி, காலை 9 மணிக்கெல்லாம் பயணிகளுக்கு போர்டிங்க் பாஸ் வழங்கப்பட்டு பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏற்றப்பட்டனர். இருப்பினும் 11 மணி ஆகியும் விமானம் புறப்படவில்லை. பயணிகள் அனைவரும் விமானத்திற்குள்ளேயே அமர்ந்து இருங்கள். விமானம் 1.30 மணிக்கு நிச்சயமாக புறப்பட்டுவிடும் என்றனர். பகல் 1 மணி ஆனதால் விமானத்திலிருந்த குழந்தைகள், மூத்த குடிமக்கள் பசியால் துடித்தனர்.

எனவே, ஆத்திரமடைந்த பயணிகள் விமானத்திலேயே அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். அதோடு விமான நிலைய உயர் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். விமான சட்ட விதிகளின்படி பறக்காமல் தரையில் நிறுத்தி வைக்கப்பட்ட விமானத்தில் பயணிகளை 2 மணி நேரத்துக்குமேல் உட்கார வைத்திருக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தாம்பரம் சேலையூரை சேர்ந்த ஒரு பெண் பயணியும் அந்த விமானத்தில் இருந்தார். விமானம் 8 மணி நேரமாகியும் புறப்படாததால் மிகவும் கவலை அடைந்த முகத்துடன், ‘‘எனது சகோதரன் மும்பையில் காலமாகிவிட்டார். அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள மும்பை செல்ல இந்த விமானத்தில் ஏறினேன். பல மணி நேரம் அலைக்கழித்து எனது சகோதரனின் முகத்தைக்கூட பார்க்க முடியாமல் செய்து விட்டீர்களே’’ என்று கதறி அழுதார். இதை கேட்டதும் சக பயணிகளும் கண்கலங்கினர்.

இதை தொடர்ந்து, விமானத்தில் இருந்த பயணிகள், விமான நிலைய ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை ஊழியர்கள் சமாதானம் செய்தனர். பின்னர், ஒருவழியாக பிற்பகல் 1.19 மணிக்கு விமானம் மும்பை புறப்பட்டுச் சென்றது. இருப்பினும், இது சம்பந்தமாக உயர் அதிகாரிகளிடம் புகார் செய்வோம் என பயணிகள் தெரிவித்தனர். விமானம் உண்மையிலேயே தாமதமானதற்கு காரணம் கோளாறா அல்லது விமானி இல்லாததால் தாமதமாக புறப்பட்டதா என்ற பலத்த சந்தேகம் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ளது.


Tags : flight ,Chennai ,funeral ,Mumbai ,Brothers , Mumbai, flight, Madras ,woman ,suffers
× RELATED கொல்கத்தா விமான நிலைய ஓடுபாதையில் 2...