மழை பாதிப்பை தடுக்க கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

சென்னை: மழையால் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, தமிழக அரசு கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.   பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:   மழை பாதிப்புகளை தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை எடுத்து வருகிறது. ஆனால் அதையும் மீறி பல்வேறு இடங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. நூற்றுக்கணக்கான வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் ஏராளமான மக்கள் வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர்களில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு சென்று விட்டனர். கடலூர் மாவட்டம்தான் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. 8000க்கும் கூடுதலான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

காவிரிப் பாசன மாவட்டங்களில் மழை மற்றும் மழை சார்ந்த விபத்துகளில் ஐந்து பேர் உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது. கடலூர் மற்றும் தென்மாவட்டங்களில் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பதால் பொதுமக்களிடையே ஒருவகையான அச்சம் நிலவி வருகிறது. எனவே, மழையால் மக்கள் பாதிக்கப்படாமல் தடுக்க கூடுதலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் உடனடியாக நிலைமை சமாளிக்கத் தேவையான நிவாரண உதவிகளையும் அரசு விரைந்து வழங்க வேண்டும்.   இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories:

>