×

முரசொலி நிலம் குறித்து கருத்து பதிவிட்ட ராமதாஸ் மீது திமுக அவதூறு வழக்கு: எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணை

சென்னை: முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக கருத்து பதிவிட்ட விவகாரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மீது திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் தனுஷ் கூட்டணியில் அசுரன் திரைப்படம் வெளியாகியது. இந்த திரைப்படத்தில் பஞ்சமி நிலம் குறித்து காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த திரைப்படத்திற்கு மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தரப்பில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் திரைப்படத்தை பார்த்த திமுக தலைவர் முக.ஸ்டாலின், இது படம் அல்ல பாடம் என்று தனது டிவிட்டர் பக்கத்தில், திரைப்படத்தை புகழ்ந்து பதிவிட்டிருந்தார். இந்த பதிவை பார்த்த பாமக நிறுவனர் ராமதாஸ், முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடமே பஞ்சமி நிலம்தான் என்று கருத்து கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், அது பஞ்சமி நிலம் இல்லை என்றும் ஆதாரங்களையும் வெளியிட்டனர்.

இதைதொடர்ந்து, தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்தனர். அதற்கு முரசொலி அலுவலகம் சார்பில் திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். ஆனால், புகார் அளித்த பாஜ, பாமக சார்பிலும் யாரும் ஆஜராகவில்லை. இந்நிலையில், முரசொலி நிலம் தொடர்பாக அவதூறு கருத்து தெரிவித்து வரும் ராமதாசுக்கு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் கடந்த 21ம் தேதி வக்கீல் நீலகண்டன் நோட்டீஸ் அனுப்பினார். அந்த நோட்டீசில், ராமதாஸ், முரசொலி இடம் குறித்து, தான் பதிவிட்ட டிவிட்டர் பதிவுகளை, நோட்டீஸ் கிடைத்த 24 மணி நேரத்தில் நீக்கிவிட வேண்டும். 48 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவேண்டும். வருங்காலத்தில் இதுபோன்ற அவதூறான பதிவுகளைப் பதிவிடக்கூடாது. இவைகளை ராமதாஸ் தவறும் பட்சத்தில், முரசொலி அறக்கட்டளை சார்பாக ஆர்.எஸ்.பாரதி எம்.பி. ரூபாய் ஒரு கோடி நஷ்டஈடு கேட்டு சிவில் நீதிமன்றத்தில் ராமதாஸ் மீது வழக்கு தொடுக்கப்படும்.

அவதூறு குற்றத்திற்காக குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் எனவும் வக்கீல் நோட்டீசில் கூறப்பட்டிருந்தது. இதேபோல், முரசொலி இடம் குறித்து, உண்மைக்கு புறம்பான மற்றும் அவதூறைப் பரப்பியதாக  பா.ஜ. தேசியச் செயலாளர் ஆர்.சீனிவாசனுக்கு இதே நிபந்தனைகளை முன்வைத்து ஆர்.எஸ்.பாரதி சார்பில் வழக்கறிஞர் எஸ்.மனுராஜ் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், இதுவரை இருவரும் வக்கீல் நோட்டீசுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், திமுக எம்.பி.யும், முரசொலியின் அறங்காவலருமான ஆர்.எஸ்.பாரதி சென்னை, எழும்பூர் 13வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பஞ்சமி நிலம் குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட ராமதாஸ், மற்றும் சீனிவாசன் மீது அவதூறு சட்ட பிரிவுகள் 499, 500 கீழ் கிரீமினல் நடவடிக்கை எடுக்க கோரி மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு, வரும் 5ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

வழக்கு தொடர்ந்த பின்னர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி அளித்த பேட்டி:  முரசொலி அமைந்துள்ள இடம், பஞ்சமி நிலம்  என்று எந்தவித ஆதாரமும் இன்றி கழகத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு பரப்பி வரும் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாஜவை சார்ந்த சீனிவாசன் ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கடந்த 21ம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தோம். ஆனால், இதுவரை அதற்கு பதில் தரவில்லை. திமுக வாய் சவடால் விடும் கட்சியில்லை. எனவே ராமதாஸ் மற்றும் சீனிவாசன் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளோம். இந்த வழக்கு வரும் 5ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.


Tags : Murasoli land Ramadoss ,DMK ,Ramadas ,land ,court , Murasoli Land, Ramadas, DMK, Egmore Court
× RELATED ஓவர் கான்பிடன்ஸ் வேணாம்..! தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்