அறநிலையத்துறை, வக்பு வாரியம்போல கிறிஸ்தவ அமைப்புகளை கண்காணிக்க வாரியம்? மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

மதுரை: இந்து அறநிலையத்துறை, வக்பு வாரியம் போல, கிறிஸ்தவ அமைப்புகளை கண்காணிக்க தனி வாரியம் அமைக்கக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை, மாகாளிப்பட்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் ெசய்த மனு:  இந்து மத கோயில்கள், மடங்கள் உள்ளிட்டவை இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றின் சொத்துக்கள் மற்றும் வருமானங்கள் உள்ளிட்டவை ஆண்டுதோறும் முறையாக தணிக்கை செய்யப்படுகிறது. இவற்றின் செயல்பாடுகள் அனைத்தும் அறநிலையத்துறையின் கீழ் உள்ளன. இதேபோல், இஸ்லாமிய அமைப்புகளின் செயல்பாடுகள், சொத்துக்கள் உள்ளிட்டவை வக்பு வாரியத்தின் கீழ் வருகின்றன. இவற்றின் செயல்பாடுகள் அனைத்தும் வக்பு வாரியத்தால் கண்காணிக்கப்படுகிறது.  

ஆனால், கிறிஸ்தவ அமைப்புகளின் செயல்பாடுகள் மட்டும் எந்தவித கண்காணிப்புமின்றி உள்ளன. இதனால், குறிப்பிட்ட சிலரை அணுகி மதமாற்றம் செய்யப்படுகிறது. கிறிஸ்தவ அமைப்புகள் சார்ந்த தொண்டு நிறுவனங்கள் அரசுக்கு எதிரான போராட்டங்களை ஊக்கப்படுத்துகின்றன. கிறிஸ்தவ அமைப்புகளின் சொத்துக்கள், வருவாய், பண உதவி குறித்து கண்காணிக்க எவ்வித அமைப்பும் இல்லை. எனவே, இந்து அறநிலையத்துறை மற்றும் வக்பு வாரியத்தைப் போல கிறிஸ்தவ மதம் சார்ந்த அமைப்புகளை கண்காணிக்க தனியாக வாரியம் போன்ற அமைப்பை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர், மத்திய, மாநில உள்துறை மற்றும் சட்டத்துறை செயலர்கள், தமிழக தலைமை செயலர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரம் தள்ளி வைத்தனர்.

Related Stories:

>