உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு மோசடி: அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்

சென்னை: உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு என்பது குழப்பங்கள், குளறுபடிகள் நிறைந்தது, மோசடியானது என்று அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்): ஒரே கட்டமாக நடத்த வேண்டிய தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்துவதில் ஏதோ ஒரு அரசியல் உள்நோக்கம் இருக்கிறது. பாரபட்சமற்ற, நியாயமான தேர்தல் நடைபெறுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகும். வைகோ (மதிமுக பொது செயலாளர்):  ஊராட்சிகளுக்கு மட்டும் முதலில் தனியாக தேர்தல் நடத்துவதாக  அறிவித்து இருப்பது உள்நோக்கம் கொண்டது. தேர்தலை  தள்ளிப் போடுவதற்காக நீதிமன்றங்களுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்கின்ற  வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது ஆளும் அரசாங்கத்தின் தந்திரம்  நிறைந்த

சூழ்ச்சி.

முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்):  முதல்வர் பழனிசாமியின் விருப்பத்தை நிறைவேற்றக் கூடியவராக தேர்தல் ஆணையர் பழனிச்சாமி செயல்பட்டு வருகிறார். ஒரே நாளில் ஜனநாயக முறைப்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்திட அரசும், தேர்தல் ஆணையமும் முன் வரவேண்டும்.கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு குழப்பங்கள், குளறுபடிகள் நிறைந்தது. மோசடியானது. உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பை தேர்தல் ஆணையம் திரும்பப்பெற்று அனைத்து குறைபாடுகளையும் களைந்து முறையான தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும்.

விசிக தலைவர் திருமாவளவன்: ஊரக அமைப்புகளுக்கு மட்டும் அறிவித்திருப்பது இதுவரை இல்லாத புதுமை. இந்த ஜனநாயக விரோதப்போக்கிற்குத் தமிழகத் தேர்தல் ஆணையம் துணைபோவது வேதனை அளிக்கிறது. இதற்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன், எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக், மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா உள்ளிட்டோரும் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>