பல கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடத்துவது வேடிக்கை மாநில தேர்தல் ஆணையம் அதிமுகவுடன் கூட்டணி: மு.க.ஸ்டாலின் பேட்டி

புதுச்சேரி: பல கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடத்துவது வேடிக்கையாக உள்ளது. அதிமுகவுடன் மாநில தேர்தல் ஆணையம் கூட்டணி வைத்து உள்ளதாக மு.க.ஸ்டாலின், பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.  புதுச்சேரியில் திமுக   தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அளித்த பேட்டி:  கடந்த 3 ஆண்டுகளாக ஆளும்கட்சியான   அதிமுக எப்படியாவது உள்ளாட்சி தேர்தலை நிறுத்த வேண்டும் என்று தொடர்ந்து   செயல்பட்டு வந்தது. தோல்வி பயத்தின் காரணமாக தேர்தலை நடத்தாமல் காலம்   கடத்தி வந்தனர். உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தலின் பேரில்   வேறு வழியில்லாமல் கடமைக்கு தேர்தல் நடத்த அதிமுக முன்வந்தது.  நீதிமன்றம் அறிவுறுத்திய காரணத்தினால் வேறு வழியில்லாமல்   வேண்டுமென்றே திட்டமிட்டு யாராவது  தடை   பெறவேண்டும். நீதிமன்றமும் அந்த உத்தரவை வழங்கிடும் என்ற நம்பிக்கையில்   அதிமுகவோடு கூட்டணி வைத்திருக்க கூடிய மாநில தேர்தல் ஆணையம்   ஒன்று சேர்ந்து இந்த தேதியை  அறிவித்திருக்கிறார்கள்.

திமுக மட்டுமல்ல, பல்வேறு கட்சியின்   தலைவர்கள், பல்வேறு அமைப்பை சார்ந்தவர்கள் தேர்தல் முறையாக நடக்க, வார்டு வரையறை முறையாக   செய்யப்படவில்லை. எஸ்சி, எஸ்டி, பெண்களுக்கு என இடஒதுக்கீடு முறையாக   நிறைவேறவில்லை. அதையெல்லாம் முறைப்படுத்திட வேண்டும் என்று தான்   நீதிமன்றத்திற்கு சென்றோமே தவிர, தேர்தலை நிறுத்த வேண்டும் என்ற   காரணத்துக்காக நாங்கள் செல்லவில்லை. ஆனால், வேண்டுமென்றே எடப்பாடி பழனிசாமி முதல், அமைச்சர்கள் வரை திமுக தான்   தேர்தலை நிறுத்த திட்டமிடுகிறது என்ற பொய் பிரசாரத்தை தொடர்ந்து   சொல்லி வருகிறார்கள். மாவட்டங்கள் பிரிக்கப்பட்டிருக்கிற நேரத்தில் வரையறை   எந்த நிலையில் இருக்கிறது என்ற விளக்கத்தை தொடர்ந்து நாங்கள் கேட்டுக்   கொண்டிருக்கிறோம். அதற்கு இதுவரை எந்த பதிலும் அரசு தரப்பில் இருந்து   வரவில்லை.  பலமுறை தேர்தல் ஆணையத்தை சந்தித்து திமுக அமைப்பு   செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மூத்த வழிக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ நேரடியாக சென்று பல்வேறு   மனுக்களை தந்திருக்கிறார்கள். முறையாக விளக்கம் வராத காரணத்தால்  நாங்கள் நீதிமன்றத்துக்கு சென்றிருக்கிறோம்.

தமிழ்நாட்டை   பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும், சட்டமன்ற தேர்தலாக   இருந்தாலும், ஒரே கட்டமாகத் தான் இதுவரை நடந்திருக்கிறது. அதேபோல உள்ளாட்சி   தேர்தலும் ஒரே கட்டமாகத்தான் நடந்திருக்கிறது. ஆனால், இப்போது ஊரக   பகுதிகளுக்கு மாத்திரம் நடத்திவிட்டு, அதற்கு அடுத்து பல கட்டங்களாக   தேர்தல் நடத்தப்போவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது வேடிக்கையாக   இருக்கிறது. இதிலிருந்து தேர்தல் ஆணையர் பழனிச்சாமியா? அல்லது எடப்பாடி பழனிச்சாமியா என்ற   சந்தேகம் உள்ளது. தேர்தல் அறிவிப்பு குறித்து கூட்டணி கட்சியினருடன்   பேசியிருக்கிறோம். நாளை (இன்று) மாலைக்குள் கலந்துபேசி அதன்பின்னர் மூத்த   வழிக்கறிஞர்களிடம் ஆலோசித்து நீதிமன்றத்தை அணுகுவது, எப்படி சந்திப்பது   என்பது குறித்து அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மழையால் சுவர் இடிந்து பலியானவர்கள் குடும்பத்துக்கு 1 லட்சம் நிதி

தொடர் மழை காரணமாக கடலூர் கம்மியம்பேட்டையில் கடந்த 30ம் தேதி வீட்டின் சுவர் இடிந்து நாராயணன் என்பவரது மனைவி மாலா (40), மகள் மகேஸ்வரி (21), பேத்தி தனு (ஒன்றரை வயது) ஆகியோர்  பலியானார்கள். மேலும் நாராயணன் உள்ளிட்ட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை கடலூர் கம்மியம்பேட்டைக்கு வந்து சுவர் இடிந்து பலியானோரின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். அவர்கள் தங்களுக்கு அதிகாரிகள் முறையான வீடு கட்டித்தரவில்லை எனக் கூறினர். அந்த குடும்பத்துக்கு 1 லட்சம் நிவாரண நிதியை ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து கடலூர் பாதிரிக்குப்பம் பகுதியில் உள்ள நவநீதம் நகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நகர் பகுதிகளை அவர் பார்வையிட்டார். பின்னர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். கடலூர் மாவட்ட செயலாளர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, துரை.கி. சரவணன் எம்எல்ஏ உட்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories:

>