×

பிரியங்கா வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள்: பாதுகாப்பு குறைபாடு என காங்கிரஸ் கண்டனம்

புதுடெல்லி:  காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தியின் வீட்டிற்குள் 7 பேருடன் மர்ம கார் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பில் குறைபாடு இருப்பதாக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பொது செயலாளர் பிரியங்காவுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அதிரடிப்படை பாதுகாப்பை மத்திய அரசு சமீபத்தில் விலக்கி கொண்டது. அதற்கு பதிலாக அவர்களுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி மத்திய ரிசர்வ் படையினர் இவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  இந்நிலையில் டெல்லியின் லோதி எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள பிரியங்கா காந்தியின் வீட்டிற்கு கடந்த 26ம் தேதி கார் ஒன்று வந்துள்ளது.

வீட்டின் பூங்கா அருகே வந்து நின்ற காரில் இருந்து 3 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் ஒரு சிறுமி ஆகியோர் இறங்கி வந்துள்ளனர். அவர்கள் பிரியங்கா காந்தியிடம் சென்று அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளனர். அவர்களிடம் சகஜமாக பேசிய பிரியங்கா காந்தி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் அவர்கள் 7 பேரும் புறப்பட்டு சென்றுள்ளனர். பின்னர் இந்த சம்பவம் மத்திய ரிசர்வ் படை கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. யாருக்கும் அனுமதி கொடுக்கப்படாத நிலையில் காரில் சிலர் வந்து பிரியங்கா காந்தியுடன் செல்பீ எடுத்து சென்றது அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பில் குறைபாடு உள்ளதை காட்டுவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும் பாதுகாப்பு குறைபாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, பிரியங்கா காந்தி வீட்டில் நடந்த இந்த சம்பவம் தனக்கு தெரியாது என மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்துக்கு வெளியே அவர் அளித்த பேட்டியில், “எனக்கு இந்த சம்பவம் குறித்து தெரியாது. நான் மக்களவையில் இருந்து வெளியே வருகிறேன். காவல்துறையிடம் இருந்து இதுகுறித்த விவரங்களை பெற்று அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்படும்” என்றார்.

Tags : persons ,house ,Priyanka ,Congress , Priyanka Gandhi, Congress, General Secretary
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்