×

நாடாளுமன்ற துளிகள்...

கேள்வியின் தரத்தை மேம்படுத்துங்கள்
மக்களவை கேள்வி நேரத்தில் பேசிய பா.ஜ எம்.பி குமன் சிங் தாமோர், மத்தியப் பிரதேசம் ரத்லம் பகுதியில் உள்ள பழைய கோயில்களை புணரமைப்பது பற்றி கேள்விகள் கேட்டிருந்தார். அதன்பின் மற்றொரு உள்ளூர் கோயிலை புதுப்பித்து, ரோடு அமைப்பது எப்போது? என கேள்வி கேட்டார். இதற்கு அமைச்சர் பதில் அளித்தபின் பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, ‘‘கேள்விகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும். உள்ளூர் கோயிலில் குழாய் அமைக்க ஒரு உறுப்பினர் விரும்பினால், அதை மத்திய அரசு செய்ய முடியாது’’ என்றார்.

ஒரே பாடத்திட்டத்துக்கு வாய்ப்பில்லை
மக்களவையில் நேற்று பேசிய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால், ‘‘தேசிய பாடத்திட்டத்தை, கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில்(என்சிஇஆர்டி) உருவாக்குகிறது. பெரும்பாலான பள்ளிகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. அதனால் பாடத்திட்டத்தை அந்தந்த மாநில அரசுகள்தான் முடிவு செய்ய வேண்டும். மாநிலங்களின் தேவைக்கு தகுந்தபடி பாடத்திட்டங்களையும், பாட புத்தகங்களையும் என்சிஇஆர்டி மற்றும் எஸ்சிஇஆர்டி ஆகியவை தேசிய பாடத்திட்ட அடிப்படையில் மேம்படுத்துகின்றன. மாநிலங்களில் உள்ள கல்வி வாரியங்கள், மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்படுகின்றன. அதனால் நாட்டில் ஒரேவிதமான பாடத்திட்டத்துக்கு வாய்ப்பில்லை’’ என்றார்.

‘ஊடுருவல்காரர்கள்’ விமர்சனத்தால் வாக்குவாதம்
பிரதமர் மோடியும், அமித்ஷாவும் குஜராத் மாநிலத்தில் இருந்து டெல்லிக்கு குடிபெயர்ந்தவர்கள் என்றும், அதனால் அவர்கள் ‘ஊடுருவல்காரர்கள்’ என மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி நேற்று முன்தினம் கூறியிருந்தார்.  இந்நிலையில் மக்களவையில் நேற்று எஃகு அமைச்சகம் தொடர்பாக கேள்வி கேட்க, அதிர் ரஞ்சன் சவுத்ரி எழுந்தார். அப்போது, ஆளும் பாஜ கூட்டணி கட்சி எம்.பி.க்கள், அவரை ‘ஊடுருவல்காரர்’ என பலமுறை கிண்டலடித்தனர். இதனால் கோபம் அடைந்த அதிர் ரஞ்சன் சவுத்ரி, ‘‘ஆமாம், நான், மோடி, அமித்ஷா, அத்வானி எல்லோருமே ஊடுருவல்காரர்கள்தான்’’ என்றார். இதனால் சபையில் பெரும் சலசலப்பு நிலவியது.

கேள்வி கேட்டுவிட்டு எம்.பி.க்கள் ‘ஆப்சென்ட்’
மாநிலங்களவையில் கேள்விகளை எழுப்பிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 7 பேர் அவைக்கு வராததால் 5 நிமிடங்களுக்கு முன்பாகவே கேள்வி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு வருத்தம் தெரிவித்த மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு, ‘‘கேள்வி நேரத்தில் இன்னும் 15 கேள்விகள் கேட்கப்பட வேண்டியுள்ளன. ஆனால் அவற்றை எழுப்பிய எம்.பி.க்கள் அவைக்கு வரவில்லை. இது மோசமான விவகாரம். இதுபோன்ற எம்.பி.க்களின் பெயரை ஊடகங்கள் வெளியிடும் என நம்புகிறேன்.’’ என கோபமாக கூறினார்.

சாலை விபத்துக்கள் குறையவில்லை
சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி  மாநிலங்களவையில் பேசுகையில், ‘‘ நாடு முழுவதும் கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரை 3.39 லட்சம் விபத்துக்கள் நடந்தன. இதில் a1,12,735 பேர் பலியாயினர். 3.45 லட்சம் பேர் காயம் அடைந்தனர். கடந்தாண்டு இதே காலத்தில் 3.46 லட்சம் விபத்துக்கள் நடந்தன. 1,12,469 பேர் பலியாயினர். 3.55 லட்சம் பேர் காயம் அடைந்தனர்.  2018ம் ஆண்டை ஒப்பிடுகையில் சாலை விபத்துக்கள் 2.2 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால் பலியானோர் எண்ணிக்கை 0.2 சதவீதம் அதிகரித்துள்ளது. பெரியளவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை’’ என வேதனையுடன் குறிப்பிட்டார்.


Tags : Parliament , Parliament
× RELATED மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில்...