×

80 மணிநேரம் மகாராஷ்டிரா முதல்வராக இருந்தபோது மத்திய அரசுக்கு 40,000 கோடியை திருப்பி கொடுத்தாரா பட்நவிஸ்?

மும்பை: முதல்வர் கட்டுப்பாட்டில் இருக்கும் 40,000 கோடி மத்திய நிதியை பாதுகாக்கவே திட்டமிட்டு நாடகம் நடத்தி கடந்த மாதம் மகாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர பட்நவிசை பதவியேற்க வைத்தோம் என்று கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பாஜ எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச்சருமான அனந்த்குமார் ஹெக்டே பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது கருத்தை தேவேந்திர பட்நவிஸ் மறுத்துள்ளநிலையில், ஆளும் சிவசேனா பட்நவிசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் மகாராஷ்டிராவில் சிவசேனா - என்சிபி - காங்கிரஸ் கூட்டணி புதிய அரசு அமைக்க தயாராகிக் கொண்டிருந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவார் ஆதரவுடன் நவம்பர் 23ம் தேதி யாரும் எதிர்பாராதவிதமாக அதிகாலை நேரத்தில் அவசர, அவசரமாக பாஜ ஆட்சி அமைத்தது. முதல்வராக தேவேந்திர பட்நவிசும் துணை முதல்வராக அஜித் பவாரும் பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

பாஜ.வுக்கு 105 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு மட்டுமே இருந்த நிலையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனால் மூன்று நாட்களுக்கு பிறகு முதல்வர் பதவியை பட்நவிஸ் ராஜினாமா செய்து விட்டார். அதன் பிறகு நவம்பர் 28ம் தேதி  சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்று பெரும்பான்மையை நிரூபித்துள்ளார். இந்த நிலையில், கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள எல்லப்பூரில், இடைத்தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அனந்த்குமார் ஹெக்டே சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்தார். பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: மகாராஷ்டிராவில் பாஜ.வுக்கு பெரும்பான்மை இல்லை என்று தெரிந்தும் தேவேந்திர பட்நவிஸ் இரண்டாவது முறையாக பதவியேற்று 80 மணி நேரத்தில் பதவி விலகினார். இந்த நாடகத்தை ஏன் நடத்தினோம் தெரியுமா? அவையில் எங்களுக்கு பெரும்பான்மை கிடையாது. அப்படி இருந்தும் அவர் ஏன் முதல்வர் ஆனார்? இது அனைவர் மனதிலும் எழக்கூடிய கேள்விதான்.

மகாராஷ்டிரா முதல்வர் பொறுப்பில் மத்திய அரசின் நிதி 40,000 கோடி குவிந்து கிடக்கிறது. சிவசேனா -என்சிபி - காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நிச்சயமாக இந்த 40,000 கோடி மாநிலத்தின் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு போகாது. அந்த நிதி பல்வேறு விஷயங்களுக்கும் சுயலாபத்துக்கும் பயன்படுத்தப்படும். இதை தடுப்பதற்காகவே நாங்கள் திட்டமிட்டு நாடகம் நடத்தினோம். பட்நவிஸ் முதல்வராக பதவியேற்ற பிறகு 15 மணி நேரத்துக்குள் சில நடவடிக்கைகளை எடுத்து அந்த பணத்தை பாதுகாத்து விட்டார். அந்த பணம் அனைத்தும் மத்திய அரசுக்கு திரும்ப கொடுக்கப்பட்டுவிட்டது. இதை நாங்கள் செய்திருக்காவிட்டால் அடுத்த முதல்வர் பணத்தை என்ன செய்திருப்பார், அந்த பணம் எங்கே போயிருக்கும் என்று உங்களுக்கே தெரியும். இவ்வாறு அனந்த்குமார் ஹெக்டே பேசினார். அமைச்சரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.

ஆனால் அனந்த்குமார் ஹெக்டேயின் இந்த பேச்சுக்கு முன்னாள் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். ‘‘மத்திய அரசு எந்த நிதியையும் கேட்கவுமில்லை. மகாராஷ்டிரா அரசு திருப்பி அனுப்பவும் இல்லை’’ என்று பட்நவிஸ் கூறியுள்ளார். பட்நவிஸ் நேற்று நாக்பூரில் இதுகுறித்து நிருபர்களிடம் கூறியதாவது: அனந்த்குமார் ஹெக்டே கூறியது முற்றிலும் தவறானது. அதை திட்டவட்டமாக நான் மறுக்கிறேன். மத்திய அரசின் ஒரு நிறுவனம்தான் புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்துகிறது. திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவது மட்டும்தான் மாநில அரசின் வேலை. மத்திய அரசு எந்த நிதியையும் கேட்கவும் இல்லை. மகாராஷ்டிரா அரசு திருப்பி அனுப்பவும் இல்லை.

எந்தவொரு திட்டத்தில் இருந்தும் மகாராஷ்டிரா அரசு ஒரு பைசாவை கூட மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பவில்லை. நான் காபந்து முதல்வராக இருந்தபோது எந்தவொரு கொள்கை முடிவையும் எடுக்கவில்லை. மத்திய மற்றும் மாநில அரசின் கணக்கு வழக்குகள் பற்றி தெரிந்தவர்களுக்கு இதுபோன்ற நிதி மாற்றம் நடக்கவில்லை என்பது புரியும். மாநில நிதித்துறை தேவையான விசாரணை நடத்தி உண்மையை வெளியே கொண்டு வர வேண்டும்.  இவ்வாறு பட்நவிஸ் கூறினார்.

மகாராஷ்டிராவுக்கு செய்த துரோகம்
40,000 கோடி மத்திய நிதியை திருப்பி அனுப்பியது மகாராஷ்டிராவுக்கு செய்யப்பட்ட துரோகம் என்று சிவசேனா சாடியுள்ளது. சிவசேனா மூத்த தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் ராவுத் இதுகுறித்து கூறுகையில், “பட்நவிஸ் செய்திருப்பது நம்பிக்கை துரோகம். அவரும் பாஜ.வும் மகாராஷ்டிரா “கிரிமினல்கள்” ஆவர். மாநில தலைமைச் செயலாளரும் முதல்வர் உத்தவ் தாக்கரேயும் இந்த பிரச்னை குறித்து விளக்கம் அளிப்பார்கள்” என்றார்.

பிரதமர் விளக்கமளிக்க காங்கிரஸ் கோரிக்கை
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், `‘மகாராஷ்டிராவுக்கு எதிரான பாஜ.வின் முகத்தை அந்த கட்சியின் எம்பி ஹெக்டே வெளிப்படுத்தியுள்ளார். இதன் மூலம் கூட்டாட்சி தத்துவம் நசுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக பயன்படுத்தப்பட இருந்த ₹40 ஆயிரம் கோடி, சதி செயல் மூலம் திரும்ப பெறப்பட்டுள்ளதா என பிரதமர்மோடி பதில் அளிக்க வேண்டும்’’ என கூறியுள்ளார்.

Tags : Patnaik ,government ,Maharashtra , Maharashtra, Central Government, Patnavis
× RELATED சிஏஜி அம்பலப்படுத்திய மோடி அரசின்...