×

ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் `ஆரோக்கிய அஸ்ரா’’ திட்டத்தின்கீழ் அறுவை சிகிச்சை நோயாளிக்கு நாளொன்றுக்கு 225: முதல்வர் ஜெகன்மோகன் தொடங்கி வைத்தார்

திருமலை: குண்டூர் அரசு மருத்துவமனையில் முதல்வர் ஜெகன்மோகன் ஒய்எஸ்ஆர் ஆரோக்கிய  அஸ்ரா திட்டத்தை நேற்று தொடங்கி வைத்தார். விழாவில், அவர் பேசியதாவது: மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்து அறுவை சிகிச்சை செய்த நோயாளி வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுவார்கள். ஆனால் வீடு திரும்பிய நோயாளி தனது குடும்பத்தில் உள்ளவர்களின் பசியைப் போக்குவதற்காக வேலைக்கு செல்லக் கூடிய நிலை ஏற்படும். இதனால் அறுவை சிகிச்சை செய்து கொண்டும் ஓய்வு எடுக்க முடியாத நிலை இருந்து வருகிறது. அதனை போக்குவதற்காக மருத்துவர்கள் வழங்கும் பரிந்துரையின்படி எத்தனை நாட்கள் ஆனாலும் சரி,  அறுவை சிகிச்சைக்கு பிறகு ஓய்வு எடுக்கும் நோயாளிகளுக்கு நாளொன்றுக்கு ₹225 முதல் மாதத்திற்கு 5 ஆயிரம் வரை வழங்கப்பட உள்ளது. ஒய்எஸ்ஆர் ஆரோக்கிய  திட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட நோயாளிகள் இதில் பயன்பெறுவார்கள்.

அறுவை சிகிச்சை முடிந்து 48 மணி நேரத்திற்கு பிறகு அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தும் விதமாக இத்திட்டம் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஜனவரி 1ம் தேதி முதல் புதிய ஆரோக்கிய  கார்டுகள் ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்கு கீழ் உள்ள அனைவருக்கும் வழங்கப்பட உள்ளது. இந்த கார்டில் க்யூ ஆர் கோடு பொருத்தப்பட்டு நோயாளிகளின் மருத்துவ குறிப்புகளும் இடம் பெறும் விதமாக செய்யப்படுகிறது. 1200 நோய்களுக்கு ஆரோக்கிய  திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் விதமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் இறுதி வாரத்தில் ‘நாடு நெடு’ திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் மாவட்ட, ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளில் உலக சுகாதார மையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள் மட்டுமே கிடைக்கும் விதமாக செய்யப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Jaganmohan ,YSR `Wellness Asra ,Andhra Pradesh ,patient , Andhra, YSR, Wellness Asra Telephone Program, Chief Minister Jeganmohan
× RELATED தனது தந்தையின் நினைவிடத்தில் இருந்து...