×

ஐதராபாத் பெண் டாக்டர் கொலை சம்பவம்: பலாத்கார குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டும்: நாடாளுமன்றத்தில் வலியுறுத்தல்

புதுடெல்லி: ஐதராபாத்தில் கால்நடைத்துறை பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று எதிரொலித்தது. பலாத்கார குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் எனவும், அவர்களுக்கு கருணை மனு வாய்ப்பு அளிக்க கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது. ஐதராபாத்தில் அரசு கால்நடைத்துறை மருத்துவமனையில் பணியாற்றிய பெண் டாக்டர் பிரியங்கா, கடந்த மாதம் 28ம் தேதி, கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று எதிரொலித்தது. மக்களவை நேற்று காலை கூடியதும், ஐதராபாத் பலாத்கார சம்பவம் எழுப்பப்பட்டது. இந்த விவகாரத்தை எழுப்பிய காங்கிரஸ் எம்.பி உத்தம் குமார், ‘‘ஐதராபாத்தில் பெண் டாக்டர் பலாத்கார கொலை சம்பவம் குறித்து தெலங்கானா உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ள கருத்து உணர்ச்சியற்றது’’ என்றார்.

கோயம்புத்தூரில் பள்ளி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட பிரச்னை குறித்து திமுக எம்.பி டி.ஆர்.பாலு பேசினார். பலாத்கார குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டும் என  திரிணாமுல் எம்.பி சவுகத் ராய் வலியுறுத்தினார்.  நிர்பயா குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறைவேற்ற தாமதம் செய்வது ஏன் என பிஜூ ஜனதா தளம் எம்.பி பினாகி மிஸ்ரா கேள்வி எழுப்பினார். ‘‘பலாத்கார குற்றவாளிகளுக்கு இன்று வரை மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. விரைவு நீதிமன்றங்களும், சட்டங்களும் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தவில்லை’’ என அவர் கூறினார்.  இந்த விவகாரம் மாநிலங்களவையிலும் நேற்று விவாதிக்கப்பட்டது. எம்.பி.க்கள் பலரும் பலாத்கார சம்பவங்கள் குறித்து பேசினர். அதன்பின் மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு பேசுகையில் கூறியதாவது:

பலாத்கார வழக்குகளில் தண்டனை அறிவித்தும் என்ன நடக்கிறது என்பதை நாம் பார்க்கிறோம். மேல் முறையீடு, கருணை மனு, மறுபரிசீலனை மனு, சீராய்வு மனு என தொடர்கிறது. இதுபோன்ற கொடிய குற்றங்கள் செய்பவர்கள் மீது யாராவது கருணை காட்டுவார்களா?  சட்ட விதிமுறைகளை மாற்றுவது பற்றி நாம் சிந்திக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றம் சமூக நோய். சட்டத்தில், போலீஸ் நடவடிக்கையிலும் சில குறைபடுகள் உள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் முளையிலேய கிள்ளப்பட வேண்டும். இதுபோன்ற குற்றவாளிகளின் புகைப்படங்களை வெளியிட வேண்டும். இப்பிரச்னைக்கு புதிய மசோதா தேவையில்லை. அரசியல் தீர்வு மற்றும் நிர்வாகத் திறமை தேவை.

அப்போதுதான் மனநிலை மாற்றம் ஏற்பட்டு, சமூக கொடுமைகளை ஒழிக்க முடியும். சட்டத்தை திருத்த அரசு தயார் மக்களவையில் நடந்த விவாதத்துக்குப் பின்னர் பதில் அளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷண் ரெட்டி, ‘‘பலாத்காரம், கொலை போன்ற கொடிய குற்றங்களுக்கு, விரைவில் நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்கு, இந்திய தண்டனை சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறை சட்டத்தை திருத்த மத்திய அரசு தயாராக உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசுகளுக்கும், காவல்துறையினருக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. 112 என்ற அவசர அழைப்பு எண்ணையும் அரசு வெளியிட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை இந்த அரசு பொறுத்துக் கொள்ளாது’’ என்றார்.

மக்கள் முன் அடித்து கொல்ல வேண்டும்
மாநிலங்களவையில் ஆவேசமாக பேசிய சமாஜ்வாதி எம்.பி ஜெயா பச்சன், ‘‘நிர்பயா பலாத்காரம் முதல், பல சம்பவங்கள் நாட்டில் தொடர்ந்து நடக்கின்றன. இதற்கு அரசு என்ன பதில் சொல்லப் போகிறது? ஐதராபாத் பலாத்காரம் சம்பவம் வெட்கக்கேடு. பலாத்கார குற்றவாளிகளை பொதுமக்கள் முன் அடித்துக் கொல்ல வேண்டும்’’ என்றார்.

Tags : Hyderabad ,rape victims ,rapists ,doctor ,Parliament , Hyderabad woman doctor, murder case, rapist, criminals, parliament
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: ஐதராபாத் அணி அபார வெற்றி!.