×

கட்சியில் இருந்து விலகுகிறாரா? சமூக ஊடக கணக்கிலிருந்து பாஜ பெயரை நீக்கினார் பங்கஜா: 12ம் தேதி முக்கிய முடிவு

மும்பை: அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப எதிர்க்காலத்தை முடிவு செய்வேன் என்று தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டு சலசலப்பை ஏற்படுத்திய பாஜ மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பங்கஜா முண்டே, இப்போது டிவிட்டர் பக்கத்தில் இருந்து பாஜ தொடர்பான அடையாளங்களை நீக்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தனது தந்தை கோபிநாத் முண்டேயின் நினைவு நாளான டிசம்பர் 12ம் தேதியன்று பங்கஜா முண்டே முக்கிய முடிவு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சரும், கோபிநாத் முண்டேயின் மகளுமான பங்கஜா முண்டே, நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பார்லி தொகுதியில் போட்டியிட்டு தனது உறவினரும் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளருமான தனஞ்சய் முண்டேயிடம் தோற்றார். தோல்விக்கு பாஜ.வினர்தான் காரணம் என்று கூறி அதிருப்தியில் இருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பங்கஜா முண்டே தமது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் டிசம்பர் 12ம் தேதி தனது தந்தையின் பிறந்தநாளையொட்டி அவருடைய நினைவிடமான ‘கோபிநாத்காட்’ வரும்படி தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்து இருந்தார். மேலும் அந்த பதிவில், “மாநிலத்தில் மாறியுள்ள அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப முன்னோக்கிச் செல்லும் வழியை சிந்தித்து எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது தற்போதைய அரசியல் மாற்றங்களின் அடிப்படையில் எனது எதிர்கால பயணம் முடிவு செய்யப்படும். அடுத்து என்ன செய்வது? எந்த பாதையை ேதர்ந்தெடுக்க வேண்டும்? மக்களுக்கு நம்மால் என்ன கொடுக்க முடியும்? நமது பலம் என்ன? மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன? இந்த அம்சங்கள் பற்றியெல்லாம் சிந்தித்து டிசம்பர் 12ம் ேததி உங்கள் முன்பு வருவேன்” என்று கூறியிருந்தார்.

இது மாநில பாஜ.வில் சலசலப்பை ஏற்படுத்தியது. எனினும் பங்கஜா முண்டே கட்சியில் தொடர்ந்து நீடிப்பார் என்று பாஜ மூத்த தலைவர்கள் கூறியிருந்தனர். இந்த நிலையில் பங்கஜா முண்டே இப்போது தனது டிவிட்டர் பக்கத்தில் ‘பாஜ’ என்ற வார்த்தை மற்றும் சின்னத்தை நீக்கி இருக்கிறார். அவருடைய இந்த நடவடிக்கை, கட்சியை விட்டு அவர் விலகுகிறாரா? என்ற சந்தேகக்தை ஏற்படுத்தி இருக்கிறது.


Tags : party ,Bajaj ,Pankaja , Social media, BJP, Pankaja
× RELATED ஏழை, எளிய மக்களுக்கு ரமலான் உதவி...