×

கொடநாடு கொலை வழக்கு முக்கிய சாட்சி மாயம்?

ஊட்டி: கோத்தகிரி அருகே கொடநாட்டில் ஜெயலலிதா, சசிகலாவிற்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. கடந்த 2017 ஏப்ரல் 23ம் தேதி இரவு இந்த தேயிலை தோட்டத்திற்குள் 11 பேர் கொண்ட கும்பல் புகுந்து, அங்கு காவலாளியாக இருந்த ஓம் பகதூரை கொலை செய்தது. மற்றொரு காவலாளியான நேபாளத்தை சேர்ந்த கிருஷ்ண பகதூர் தேபாவையும் கொடூரமாக தாக்கியது. பின் பங்களாவிற்குள் நுழைந்த அந்த கும்பல் அங்கிருந்த சில பொருட்களை திருடிச் சென்றது. இதில் தொடர்புடைய 10 பேரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கை நீதிபதி வடமலை விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த மாதம் நடந்த விசாரணையின்போது அடுத்த மாதம் (டிசம்பர்) முதல் சாட்சிகள் விசாரணை துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்கில், ஒரே முக்கிய சாட்சி காவலாளி கிருஷ்ண பகதூர் தேபா. இவர் கொலை நடந்த சில மாதங்களிலேயே கொடநாடு எஸ்டேட்டை விட்டு வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. இவரை தேடி தமிழக போலீசார் நேபாளம் சென்றுள்ளனர்.

ஆனால், அங்கு அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும், அவரது உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் நேபாளத்திற்கு வரவில்லை என கூறியுள்ளனர். இதனால் ஏமாற்றம் அடைந்த போலீசார் இந்தியா திரும்பியுள்ளனர். கொடநாடு எஸ்டேட்டில் இருந்து சென்ற கிருஷ்ண பகதூர் தேபா, வேறு மாநிலத்திற்கு எங்காவது வேலைக்கு சென்றாரா? அல்லது இந்த கொலை வழக்கில் சாட்சி சொல்ல பயந்து எங்காவது ஓடி ஒளிந்திருக்கிறாரா? அல்லது இவரை யாரேனும் பிடித்து வைத்து சாட்சி சொல்ல விடாமல் தடுத்து வருகிறார்களா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஆனால், இவரை நாடு முழுவதும் தமிழக போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : witness ,Kodanad , Main witness , Kodanad murder case?
× RELATED நீலகிரி வனப்பகுதியில் துப்பாக்கி...