சிலை கடத்தல் குறித்து விசாரணை தமிழக அரசிடம் பொன்.மாணிக்கவேல் ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும்

* கோர்ட் அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை

* உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: தமிழக சிலை கடத்தல் வழக்கு தொடர்பாக அனைத்து ஆவணங்கள் மற்றும் விசாரணை அறிக்கைகளை அந்த துறை உயர் அதிகாரியிடம் கண்டிப்பாக ஒப்படைக்க வேண்டும் என சிறப்பு அதிகாரியான பொன்.மாணிக்கவேலுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சிலை கடத்தல் வழக்கை விசாரித்து வந்த ஓய்வுபெற்ற ஐஜி பொன்.மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக பணி நீட்டிப்பு செய்ததற்கு எதிராக, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இதையடுத்து மனுவை விசாரித்த நீதிமன்றம், பொன்.மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்தது செல்லும் என்றும், அதற்கான அதிகாரம் உயர் நீதிமன்றத்திற்கு உண்டு எனவும் கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேலும் ஒரு புதிய மனு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “சிலைக் கடத்தல் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசுக்கு எதிராக விசாரணை அதிகாரியாக இருக்கும் பொன்.மாணிக்கவேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளார். அதனால் அந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். அதேபோல், விசாரணை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் துறை சார்ந்த உயர் அதிகாரியிடம் அவர் கொடுக்காமலும், ஒத்துழைப்பு அளிக்காமலும் இருந்து வருகிறார்’’ என  குறிப்பிடப்பட்டது. இந்த வழக்கு டிசம்பர் 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், மேற்கண்ட வழக்கு, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அசோக் பூஷன் மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, “சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் பணிக்காலம் கடந்த மாதம் 30ம் தேதியோடு முடிவடைந்து விட்டது. . வழக்கு தொடர்பான ஆவணங்களை கேட்டால் எங்களுக்கு எதிராகவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்கிறார். எனவே பொன்.மாணிக்கவேல் இனியும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக தொடரக்கூடாது. நாங்களே வேறு ஒரு அதிகாரியை நியமித்துக் கொள்கிறோம்’’ என வாதிட்டார்.

இதற்கு பொன்.மாணிக்கவேல் தரப்பு வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதாடினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “சிலை கடத்தல் வழக்கை விசாரித்து வந்த பொன்.மாணிக்கவேல் அதுதொடர்பான அனைத்து ஆவணங்கள் மற்றும் விசாரணை அறிக்கை ஆகியவற்றை துறையின் உயர் அதிகாரியிடம் கண்டிப்பாக ஒப்படைக்க வேண்டும். உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசுக்கு எதிராக பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. அவரது பணிக்காலத்தை நீட்டிப்பது தொடர்பாக நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க விரும்பவில்லை. அதனை சென்னை உயர் நீதிமன்றமே முடிவு எடுத்துக்கொள்ளலாம்.  பொன்.மாணிக்கவேலுக்கு பதவி நீட்டிப்பு வழங்க கூடாது என தமிழக அரசு தொடர்ந்த மனு மீது அனைத்து எதிர்மனுதாரர்களும் பதிலளிக்க நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்புகிறது’’ என உத்தரவிட்டனர்.

Related Stories:

>