தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் அறிவித்துள்ளது குளறுபடிகளை ஏற்படுத்தும் : தேர்தலை நிறுத்த அதிமுக அரசு முயற்சியா?

சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் அறிவித்துள்ளது பல்வேறு குளறுபடிகளை ஏற்படுத்தும் என்றும், இதன்மூலம் தேர்தலை நிறுத்த அதிமுக முயற்சி செய்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. வழக்கமாக மாநகராட்சி முதல் ஊரக உள்ளாட்சிகள் அனைத்துக்கும் சேர்த்துதான் தமிழகத்தில் இதுவரை தேர்தல் அறிவிக்கப்பட்டு வந்தது. ஆனால், எப்போதும் இல்லாத நடைமுறையாக தற்போது ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்களுக்கு பின்னர் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதுபோன்ற ஒரு குழப்பத்தை காரணம் காட்டி பலர் நீதிமன்றம் செல்ல முடியும். அப்படி சென்றால் உள்ளாட்சி தேர்தல் தற்காலிகமாக நிறுத்தப்படலாம் அல்லது தள்ளி போகலாம். ஆளும் அதிமுக அரசுக்கு உண்மையில் உள்ளாட்சி தேர்தல் நடத்த ஆர்வம் இல்லை என்பதையே இது காட்டுகிறது. இதுபோன்ற ஒரு குளறுபடியான அறிவிப்பை வெளியிட்டு, நீதிமன்றம் செல்ல எதிர்க்கட்சிகளை தூண்ட முயற்சி செய்துள்ளதாகவே தெரிகிறது.
முக்கியமாக தமிழகத்தில் தற்போது 37 மாவட்டங்கள் உள்ளன. ஆனால், 31 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 655 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மட்டுமே தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு காரணத்தை வைத்தே, நீதிமன்றம் சென்று தேர்தல் நிறுத்த முடியும் என்கிறார்கள், அரசியல் விமர்சகர்கள்.

மேலும் கிராம ஊராட்சிகளுக்கு மட்டும் தேர்தலை நடத்தி விட்டு பின்னர் நகரப்பகுதிகளுக்கு தேர்தல் நடத்தினால், கள்ள ஓட்டு முதல் பல்வேறு முறைகேடுகளை செய்ய ஆளும் தரப்புக்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்கவே வழி வகுக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.அடுத்து, தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுமார் இரண்டு லட்சம் பேர் ஈடுபடுத்தப்படுவார்கள். இவர்கள் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் தேர்தலின்போது பணியாற்ற வேண்டும். அடுத்து, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு நடைபெறும் தேர்தலிலும் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை வரும். இப்படி, ஒருவர் இரண்டு தேர்தலிலும் பணியாற்றுவதில் நடைமுறை சிக்கல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags : localities ,Elections ,Tamil Nadu ,AIADMK ,election , Election for the rural localities , state of Tamil Nadu, only problem
× RELATED உள்ளாட்சி தேர்தல் சீட் விவகாரம் தமிழக காங். அறிக்கை