×

எத்தனை அதிகார துஷ்பிரயோகங்களுடன் முதல்வர், அமைச்சர்கள் தேர்தல் களத்திற்கு வந்தாலும் திமுக கூட்டணி சந்திக்கும் : மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை: எத்தனை அதிகார துஷ்பிரயோகங்களுடன் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தேர்தல் களத்திற்கு வந்தாலும் உள்ளாட்சி தேர்தலை திமுக கூட்டணி சந்திக்கும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குக் குற்றேவல் புரியும் எடுபிடி ஆணையமாக, மற்றொரு பழனிசாமி என்பவரின் தலைமையில் இயங்கும், தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் பச்சோந்தியாக மாறி, எந்த சட்ட விதிமுறைகளையும் கடைப்பிடிக்காமல், நகர்ப்புற அமைப்புகளைத் தவிர்த்துவிட்டு, டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் என்று அறிவித்துள்ளதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இனி மாநில தேர்தல் ஆணையத்திற்கு தனி அலுவலகம் தேவையில்லை. அதிமுக தலைமை அலுவலகத்தின் ஒரு மூலையில் தனது அலுவலகத்தையும் நடத்திக் கொள்ளலாம். அந்த அளவுக்கு தரம் தாழ்ந்து தகுதி இழந்திருக்கிறது.

மாவட்டங்களைப் பிரித்து, அந்த மாவட்டங்களில் வார்டு மறுவரையறை செய்யவில்லை. பட்டியலின, பழங்குடியின மற்றும் பெண்கள் ஆகியோருக்கு இடஒதுக்கீட்டைச் செய்யவில்லை. மாவட்டங்களுக்கு செய்த துரோகம் தவிர, நேரடித் தேர்தலுக்குப் பதில் மறைமுகத் தேர்தல் என்று அவசரச் சட்டம் பிறப்பித்தார்கள். சட்டப்படியான நடைமுறைகளை முடித்து உள்ளாட்சித் தேர்தலை அறிவிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை மீறி உள்ளார்கள். இரு மாவட்டங்களுக்கு ஒரு மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர், ‘ஒரு யூனியனுக்கு இரண்டு அல்லது மூன்று மாவட்ட ஆட்சி தலைவர்கள், இரண்டு அல்லது மூன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் என்று நிர்வாக அலங்கோலத்தின் மொத்த உருவமாக இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது கேவலமானது.

பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி செயல்பட முடியாத ஒரு மாநிலத் தேர்தல் ஆணையர் தமிழ்நாட்டிற்குத் தேவையா என்ற கேள்வியே எழுந்துள்ளது.
பொங்கலுக்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்பே 1000 விநியோகம் போன்ற எத்தனை அதிகார துஷ்பிரயோகங்களுடன் எடப்பாடி பழனிசாமியும், அவரது அமைச்சரவை சகாக்களும் களத்திற்கு வந்தாலும், திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் சந்திக்கும். மக்களின் பேராதரவுடன் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலில் மாபெரும் வெற்றியைக் குவித்து, அதிமுக அரசின் முகத்தில் கரியைப் பூசும். இதற்கு மக்களும் தயாராகவே இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்றிரவு நடந்தது. இந்த கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி எம்பி, கே.என்.நேரு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் தேர்தல்  நடத்தப்படும். மற்ற இடங்களுக்கு பின்னர் அறிவிக்கப்படும் என்ற மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு பற்றி ஆலோசிக்கப்பட்டது. அடுத்தக்கட்டமாக என்ன செய்யலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு தொடர்பாக மு.க.ஸ்டாலினிடம் ஆலோசித்து நீதிமன்றத்தை நாடுவோம் என்று துரைமுருகன் பேட்டியின் போது அறிவித்திருந்தார். தேர்தல் அறிவிப்பு தொடர்பாக நீதிமன்றம் செல்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Tags : coalition ,DMK ,ministers ,MK Stalin ,CM , DMK coalition ,no matter, CM, ministers come to the polls
× RELATED ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம்...