×

குட்கா விவகாரத்தில் திடீர் திருப்பம் சொத்துக்கள் வாங்கி குவிப்பா?

* கோயில், கோயிலாக செல்வதால் விசாரணையில் விலக்கு
* அமலாக்கத்துறைக்கு மாஜி டிஜிபி டி.கே.ராஜேந்திரன் கடிதம்

சென்னை: விசாரணைக்கு ஆஜராகாத முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், கோயில் கோயிலாக செல்வதால் விசாரணைக்கு ஆஜராகாமல் இருக்க தனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் யார் பெயரில் சொத்து வாங்கியுள்ளார் என்ற விவரத்தையும் தெரிவித்துள்ளார். இது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை செங்குன்றத்தில் உள்ள குட்கா வியாபாரி மாதவராவுக்கு சொந்தமான குடோனில் கடந்த 2016ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, குட்கா விற்பனை செய்ய லஞ்சம் வாங்கிய காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் பெயர் பட்டியல் அடங்கிய டைரி சிக்கியது. அந்த டைரியில், சுகாதாரத்துறை அமைச்சர், முன்னாள் டிஜிபி, முன்னாள் போலீஸ் கமிஷனர், 2 இணை கமிஷனர்கள், ஒரு துணை கமிஷனர், ஒரு உதவி கமிஷனர் மற்றும் சுகாதாரத்துறை, சுங்கத்துறை, உள்ளிட்ட 24 அதிகாரிகளுக்கு ரூ.40 கோடி அளவுக்கு லஞ்சம் கொடுத்ததற்கான டைரி சிக்கியது. இதுகுறித்து வருமான வரித்துறை தமிழக அரசுக்கு லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் குறித்த பட்டியலை அனுப்பியது. அதை தொடர்ந்து இந்த வழக்கு லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

அதைதொடர்ந்து சிபிஐ வழக்கு பதிவு செய்து குட்கா வியாபாரிகளான மாதவராவ், சீனிவாசராவ், உமா சங்கர் குப்தா மற்றும் லஞ்சம் வாங்கியதாக கூறப்படும் முன்னாள் டிஜிபிக்கள் ஜார்ஜ், டி.கே.ராஜேந்திரன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் ரமணா வீடு என 35 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அதில், முறைகேடுக்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியது. அதன்படி சிபிஐ டி.ேக.ராஜேந்திரன், ஐஜிக்கள் தினகரன், தர், வரதராஜூ, விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயகுமார், டிஎஸ்பி மன்னர்மன்னன் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் குட்கா வியாபாரிகள் மாதவராவ், சீனிவாசராம், குப்தா மற்றும் உணவுத்துறை அதிகாரிகள் பாண்டியன், செந்தில் முருகன், சிவக்குமார் ஆகிய 6 பேரை சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.
அதைதொடர்ந்து சிபிஐ வழக்கு தொடர்பான அறிக்கையை அமலாக்கத்துறை விசாரணைக்கு அனுப்பியது. அமலாக்கத்துறை அதிகாரிகள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா ஆகியோருக்கு சொந்தமான 243.80 கோடி மதிப்புள்ள 174 அசையா சொத்துக்கள் மற்றும் 2.29 கோடி மதிப்புள்ள பங்கு முதலீடு மற்றும் சொகுசு கார்கள் என மொத்தம் 246 கோடி மதிப்புள்ள சொத்துக்களை கடந்த ஜூலை 29ம் தேதி முடக்கியது.

கடந்த 10 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த குட்கா வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. குட்கா வழக்கில் தொடர்புடைய அமைச்சர் மற்றும் உயர் காவல் துறை அதிகாரிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில், அமலாக்கத்துறை தனது விசாரணையை தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக குட்கா வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை கூடுதல் கமிஷனர் தினகரன், காவல்துறை நவீனமயமாக்கல் ஐஜி ஸ்ரீதர், மற்றும் பெண் எஸ்பி ஆகியோர் நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பட்டது. அதன்படி நேற்று காலை பெசன்ட்நகர் ராஜாஜி பவனில் உள்ள பெண் துணை கமிஷனர் மட்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜாகியுள்ளார். இவர்தான், முதன் முதலில் குட்கா குடோனில் சோதனை நடத்தினார். இந்தநிலையில் டி.கே.ராஜேந்திரன் நேற்று ஆஜராக வேண்டும். ஆனால் அவர் ஆஜராகவில்லை. ஆனால் அமலாக்கத்துறைக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.  அமலாக்கத்துறை அனுப்பிய சில கேள்விகளுக்கு மட்டும் பதில் அளித்து விட்டு, தான் விசாரணைக்கு ஆஜராகாமல் இருக்க விலக்கு அளிக்கும்படியும், இந்த விளக்கத்தையே தன்னுடைய பதிலாக எடுத்துக் கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முகப்பேரில் உள்ள வீட்டுக்கு கடந்த மாதம் 20ம் தேதி ஒரு சம்மன் வந்தது. அதில், இன்று(3ம் தேதி) காலை 11 மணிக்கு உரிய ஆவணங்களுடன் ஆஜராக வேண்டும் என்று கூறியுள்ளீர்கள். அதில், 7 கேள்விகளுக்கு பதில் கேட்டிருந்தீர்கள். பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் எனக்கு ஏன் எனக்கு இந்த சம்மன் அனுப்பப்பட்டது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனாலும் உங்கள் 7 கேள்விகளுக்கும் என்னுடைய விளக்கத்தை பட்டியலிட்டுள்ளேன். அவை வருமாறு: என் பெயரிலோ, என் மனைவி பெயரிலோ உள்ள அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்களை, ஐபிஎஸ் அதிகாரி என்ற முறையில் ஏற்கனவே, அரசிடம் சமர்பித்துள்ளேன். இது மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. என்னுடைய மகள் பெயரில் சொத்துக்கள் ஏதும் இல்லை. 2010 முதல் நானும், எனது குடும்பத்தினரும் வங்கியில் வைத்துள்ள கணக்கு விவரங்களை கேட்டுள்ளீர்கள். அந்த விவரங்கள் வங்கியிடம் வேண்டுமானால் இருக்கலாம். என்னிடம் இல்லை. ஆனால் அதுவே வங்கியிடம் இருக்குமா என்பதும் தெரியவில்லை. முடிக்கப்பட்ட வங்கி கணக்கு விவரங்களும் என்னிடம் இல்லை.

குட்கா முறைகேடு தொடர்பான நீங்கள் கேட்டுள்ள ஆவணங்கள் எல்லாம், காவல்துறையில் ரகசிய கடிதங்களாகும். அது என்னிடம் இல்லை. என் மகள்களின் திருமண ஏற்பாடுகள் நிமித்தமும், சில இந்து மத விழாக்களில் கலந்து கொள்வதற்காகவும் நான் டிசம்பர் 1 ம் தேதி எனது சொந்த ஊரான திருவண்ணாமலை குடும்பத்துடன் செல்கிறேன். அதன் பிறகு தஞ்சாவூருக்கும், திருச்சிக்கும் 2ம் தேதி என் மகள்களின் திருமண ஏற்பாடுகளுக்காக செல்கிறேன். 3ம் தேதி திருநெல்வேலிக்கும், திருச்செந்தூருக்கும் இந்து மத சடங்குகள் செய்ய செல்ல இருக்கிறேன். 4ம் தேதி மதுரையில் இருக்கிறேன். நான் பிறந்த ஊரான திருவண்ணாமலையில் அரங்கம் ஒன்றை திறந்து வைக்க என்னை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள். அதன் அழைப்பிதழை இத்துடன் இணைத்திருக்கிறேன். இந்த விழாவை கார்த்திகை மாதம் தான் நடத்த வேண்டும். மார்கழி துவங்கும் முன் நடத்த வேண்டும் என்பது விழா ஏற்பாட்டாளர்களின் எண்ணம். இந்து மத ஐதீகத்தின் படி மார்கழி மாதத்தில் எந்த நல்ல காரியமும் செய்ய மாட்டார்கள் என்பதன் அடிப்படையில் விழா, அந்த மாதத்திற்கு முன் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. குடும்பத் தலைவராக நான் இந்த பயணங்களை செய்ய கடமை எனக்கு இருக்கிறது. இதனால், விசாரணைக்காக நான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கும்படி கேட்டு கொள்கிறேன்.இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

நேரில் விசாரணை நடத்தினால்தான் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என்று அதிகாரிகள் கருதுகின்றனர். இதனால் விரைவில் அவருக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளனர். அதைதொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு சென்னை கூடுதல் கமிஷனர் தினகரன், ஐஜி தர் ஆகியோர் நாளை ஆஜராகின்றனர். குட்கா விவகாரம் சூடுபிடித்துள்ளதால் லஞ்ச பட்டியலில் சிக்கியுள்ள போலீஸ் அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் முன்னாள் டிஜிபி ஜார்ஜ்

குட்கா வழக்கில் விசாரணைக்கு நேற்று நேரில் ஆஜராகும்படி முன்னாள் டிஜிபி ஜார்ஜ்க்கு அமலாக்கத்துறை கடந்த மாதம் 22ம் தேதி சம்மன் அனுப்பியது. ஆனால் ஜார்ஜ் தற்போது அமெரிக்கா சென்றுள்ளதால் நேற்றைய அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக வில்லை. அவரது சார்பில் விளக்க கடிதம் அமலாக்கத்துறைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரம், குட்கா வியாபாரி மாதவராவிடம் ஒவ்வொரு மாதமும் கடந்த 2013ல் இருந்து 2016 வரை சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த 4 ஐபிஎஸ் அதிகாரிகள், கூடுதல் கமிஷனர்களாக இருந்த 6 அதிகாரிகள், வடக்கு மண்டல இணை கமிஷனர்களாக இருந்த 3 அதிகாரிகள், துணை கமிஷனர்களாக இருந்த 6 அதிகாரிகள், உதவி கமிஷனர்களாக இருந்த 3 அதிகாரிகள், செங்குன்றம் காவல் நிலையத்தில் இருந்த 6 இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 30 காவல் துறை அதிகாரிகள் யார் யார் லஞ்சம் பெற்றனர் என்பது குறித்த பட்டியலை கடந்த 2016 டிசம்பர் 22ம் தேதி, தமிழக உள்துறை செயலாளருக்கு அப்போது சென்னை மாநகர கமிஷனராக இருந்த ஜார்ஜ் அனுப்பி இருந்தார். இதனால் இந்த வழக்கில் அவர் முக்கிய சாட்சியாக  இருப்பார் என்று அமலாக்கத்துறை வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.

Tags : affair ,Kutka , sudden twist,Gutka affair?
× RELATED வெளிநாடுகளுக்கு போதை பொருட்கள்...