×

மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய விவகாரம் பி.டி.அரசகுமார் பாஜ நிகழ்ச்சியில் பங்ககேற்க தடை : நடவடிக்கை எடுக்க கோரி கட்சி மேலிடத்துக்கு கடிதம்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய, பாஜமாநில துணை தலைவர் பி.டி.அரசகுமார் பாஜ நிகழ்ச்சி, கூட்டங்களில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுக நிர்வாகியின் திருமண விழா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பாஜ மாநில துணை  தலைவர் பி.டி.அரசகுமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர்,  எம்ஜிஆருக்கு பிறகு நான் ரசித்த தலைவர் மு.க.ஸ்டாலின் தான். இயக்கத்திற்காக  நன்றி கடன் பட்டவன். காலம் கனியும், காரியங்கள் தானாக நடக்கும். தளபதி  அரியணை ஏறுவார். அதையெல்லாம் நாம் பார்த்து அகம் மகிழ்ச்சி அடைவோம். நான்  ஏற்கனவே திமுக கரைவேட்டி கட்டியவன். எப்பொழுது வேண்டுமெனாலும்  கட்டிக்கொள்வேன். யாரும் கொடுத்து கட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று பேசினார். அவரின் பேச்சு பாஜவுக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக பாஜ தலைமை அலுவலக பொறுப்பாளரும், மாநில பொது செயலாளருமான கே.எஸ்.நரேந்திரன் வெளியிட்ட அறிக்கையில், “ பாஜ துணை தலைவர் பி.டி.அரசகுமாரின் பேச்சு கட்சியின் கட்டுப்பாட்டையும், கண்ணியத்தையும் மீறிய செயலாக கருதப்படுவதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேசிய தலைமைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தேசிய தலைமையில் இருந்து பதில் வரும் வரை அவர் கட்சியின் சார்பில் எவ்வித நிகழ்ச்சிகளும், கூட்டங்களிலும், ஊடக விவாதங்களிலும் கலந்து கொள்ளக்கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Mathrubhumi ,Bharatiya Janata Party , Banned from attinding ,Bharatiya Janata Party's stunt
× RELATED தேசிய மலரான தாமரை சின்னத்தை...