செவிலியர், மருத்துவ அலுவலர்கள் 5,224 பேருக்கு பணி நியமன ஆணை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

சென்னை: செவிலியர் மற்றும் மருத்துவ அலுவலர்கள் 5224 பேருக்கு பணி நியமன ஆணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார். மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் செவிலியர்கள், மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடந்தது. விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார். மேலும், தமிழ்நாடு இணையவழி கண் - இயல் வலைதளம் மற்றும் 32 மாவட்டங்களில் தொலைதூர கண் பரிசோதனை மையங்கள் தொடங்கி வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது: கடந்த 9 ஆண்டுகளில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைக்கு 75 ஆயிரத்து 268 கோடியே 72 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 9 மருத்துவக் கல்லூரிகள் துவங்கியதன் விளைவாக, கூடுதலாக 900 பேர் மருத்துவர்களாக படிக்கக்கூடிய வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அமைப்பதற்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருக்கிறோம்.

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் 5,200 நபர்களை தேர்வு செய்துள்ளது. இவர்களுடன், பொது சுகாதாரத் துறையில் கருணை அடிப்படையில் 24 இளநிலை உதவியாளர்களுக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் சுமார் 5,224 பேர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. 32 ஆரம்ப சுகாதார நிலையங்களில், நவீன இணையவழி கண் பரிசோதனை மையங்கள், அனைத்து மருத்துவ கருவிகளுடன் மாவட்டத்திற்கு ஒன்று வீதம், ஏற்படுத்தப்பட்டுள்ளன. அரசு மருத்துவ நிலையங்களுக்கு வரும் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றுகின்ற புனிதமான சேவையை செய்ய நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை உணர்ந்து பணிபுரிய கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். விழாவில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அமைச்சர்கள், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>