×

தமிழகம் முழுவதும் மழை பாதிப்புகள் குறித்து முதல்வர் எடப்பாடி அவசர ஆலோசனை

சென்னை: சென்னையில் வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், நேற்று தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. அதில், பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய 4,399 பகுதிகள் கண்டறியப்பட்டு, பல்வேறு துறைகளை உள்ளடக்கிய 639 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 9,162 பெண்கள் அடங்கிய 21,597 எண்ணிக்கையிலான முதல்நிலை மீட்பாளர்களும், கால்நடைகளை பாதுகாக்க 8,871 முதல்நிலை மீட்பாளர்களும், சாலைகளில் விழும் மரங்களை வெட்டி அகற்றுவதற்கு 9,909 முதல்நிலை மீட்பாளர்களும் தயார் நிலையில் உள்ளனர் என்று அதிகாரிகள் விளக்கினர். மாநிலத்தில் உள்ள தாழ்வான மற்றும் பாதிப்பிற்குள்ளாகும் இடங்களில் வசிக்கும் மக்களை பாதுகாக்கும் பொருட்டு 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களை தவிர, 4,768 பள்ளிகள், 105 கல்லூரிகள், 2,394 திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாயக் கூடங்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும், மாவட்டங்களில் 3,915 மரம் அறுக்கும் இயந்திரங்கள், 2,897 இயந்திரங்கள், 2,115 ஜெனரேட்டர்கள் மற்றும் 483 ராட்சத பம்புகள் தயார் நிலையில் உள்ளன. மேலும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனத்தால், ஒரு லட்சம் மின் கம்பங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினரிடம் பயிற்சி பெற்ற 4,155 காவலர்கள் (சென்னை நீங்கலாக) அனைத்து கடலோர மாவட்டங்களிலும், 1,844 காவலர்கள் இதர மாவட்டங்களிலும், சென்னை மாவட்டத்தில் 607 காவலர்களும் ஆக மொத்தம் 6,606 பயிற்சி பெற்ற காவலர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் கீழ் 4,537 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 1,400 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 2,000 நபர்களுக்கு ஒத்திகைப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். கன மழையின் காரணமாக, பல்வேறு நிகழ்வுகளில் 8 நபர்கள் உயிரிழந்துள்ளனர். 8 நபர்கள் காயமடைந்துள்ளனர். மேலும், 58 கால்நடை இழப்புகள் ஏற்பட்டுள்ளதோடு, 1305 குடிசை வீடுகளும், 465 ஓட்டு வீடுகளும் சேதமடைந்துள்ளன.

மேற்கூறிய பாதிப்புகளுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து இழப்பீட்டுத் தொகை வழங்கவும், இடுபொருள் மானியம் வழங்கவும், காப்பீட்டுத் தொகயை பெற்றுத் தரவும், காப்பீட்டுக் காலத்தை நீட்டிப்பு செய்வதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் முதல்வர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், டாக்டர் சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் க.சண்முகம் உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : Emergency consultation ,Tamil Nadu , Emergency consultation, rain impacts across Tamil Nadu
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...