×

மழைநீருடன் கலந்த கழிவுநீரை வெளியேற்ற கொரட்டூர் ஏரியை அதிகாரிகள் உடைத்தனர்: சமூகநல ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம்

அம்பத்தூர்: மழைநீருடன் கலந்துவிட்ட கழிவுநீரை வெளியேற்றுவதற்காக கொரட்டூர் ஏரியை உடைத்த அதிகாரிகளை கண்டித்து சமூகநல ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2 நாட்களாக கனமழை பெய்வதால் அம்பத்தூர், கருக்கு, டிடீபி காலனி மற்றும் இ.பி.காலனி, ஞானமூர்த்தி நகர் விரிவு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து ஓடியது. சில இடங்களில் வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி நின்றது. கழிவுநீருடன் கூடிய மழைநீரை அகற்றும்படி அம்பத்தூர் மண்டல அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நேற்றிரவு 8 மணியளவில் மாநகராட்சி பொறியாளர்கள் தலைமையில் சம்பவ இடத்துக்கு ஊழியர்கள் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் அப்பகுதியில் வீடுகளை சுற்றிலும் தேங்கியிருந்த கழிவுநீருடன் கூடிய மழைநீரை அகற்ற முடிவு செய்து, கொரட்டூர் ஏரிக்கரையை பொக்லைன் இயந்திரம் மூலம் உடைத்தனர். பின்னர் அங்கு தேங்கியிருந்த மழைநீருடன் கூடிய கழிவுநீரை கொரட்டூர் ஏரிக்குள் திறந்து விட்டனர்.

இதுகுறித்து அறிந்ததும் கொரட்டூர் ஏரி பாதுகாப்பு இயக்கத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொரட்டூர் ஏரிக்குள் கழிவுநீரை திறந்துவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் இன்று காலை வந்து கொரட்டூர் ஏரிக்கு கழிவுநீர் செல்லும் பாதையை அடைத்தனர். இருப்பினும் கால்வாய்களில் தேங்கியிருந்த அனைத்து கழிவுநீரும் கொரட்டூர் ஏரிக்குள் கலந்து மாசடைந்தது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘’ சமீபத்தில் கொரட்டூர் ஏரியை வருவாய் துறை செயலாளரும் தற்போதைய தலைமை செயலாளருமான க.சண்முகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கால்வாயில் வரும் தொழிற்சாலை கழிவுநீரை சுத்திகரித்து கொரட்டூர் ஏரியில் விடவேண்டும் என்றார். ஆனால், அவரது உத்தரவை மீறி, கொரட்டூர் ஏரியின் கரையை உடைத்து, அப்பகுதியில் குவிந்துள்ள கழிவுநீரை திறந்துவிட்டுள்ளனர். இதனால் அந்த ஏரி மாசடைந்து விட்டது. பசுமை தீர்ப்பாயம் மற்றும் வருவாய் துறை செயலாளரின் உத்தரவை மீறி சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இதுபோன்ற அடாவடி செயல்களில் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள்மீது உயர் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.


Tags : activists ,lake ,Korattur ,protests , Rainwater, Lake Korattur, officials, community welfare activists, demonstration
× RELATED கோவில்பட்டியில் இந்தியா கூட்டணி...