×

கடலூர் மாவட்டத்தில் பலத்தமழை எதிரொலி: கோண்டூர், காட்டுமன்னார்கோவில் உள்பட 6 முகாம்களில் ஆயிரம் பேர் தங்க வைப்பு

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழை மாவட்டத்தை அச்சுறுத்தியுள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருப்பதோடு, பல்வேறு வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. இந்நிலையில், இந்த மழைக்கு இதுவரை  மாவட்டம் முழுவதும் 116 வீடுகள் சேதமடைந்துள்ளன. 500 க்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியாக இடிந்துள்ளன.  மழைக்கு பின்னர் விரிவான கணக்கெடுப்பு நடத்த வருவாய்த்துறையினருக்கு  மாவட்ட நிர்வாகம்  உத்தரவிட்டுள்ளது. முழு சேதத்திற்கு ரூ.5 ஆயிரமும், பகுதி சேதத்திற்கு ரூ.4,200ம் நிவாரணமாக வழங்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பு குறித்தும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றியும் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கூறியதாவது: மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருவதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், சுமார் 10 ஆயிரம் குடும்பத்தினரின் குடியிருப்புகளை நீர் சூழ்ந்துள்ளது. எனவே, அவர்களுக்கு பாதுகாப்பான இடம் வழங்கும் பொருட்டும், உணவு வழங்குவதற்காகவும் மாவட்டத்தில் கடலூர் வட்டத்தில் கே.என்.பேட்டை, கோண்டூர், காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் காட்டுமன்னார்கோயில், கண்ணங்குடி, குமராட்சி, விருத்தாசலம் வட்டத்தில் மேல்பாதி ஆகிய 6 இடங்களில் மழை பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டன.

கனமழையினால் மாவட்டத்தில் ஆறு, குளங்களில் உடைப்பு ஏற்படவில்லை. எனினும், கொளக்குடி சாம்பல் ஏரியில் உடைப்பு ஏற்பட்டு பரவனாற்றில் வெள்ளமாகச் செல்கிறது. வீராணம், வாலாஜா ஏரிகள் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளன. எனவே, வீராணத்திற்கு வரும் 5 ஆயிரம் கனஅடியையும், வாலாஜாவிற்கு வரும் 1500 கனஅடியையும் அப்படியே வெளியேற்றி வருகிறோம். எனவே, பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அதிக மழை இருந்தால் மட்டுமே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் நிறுத்தப்படும். இல்லையெனில் மின்விநியோகத்தில் தடையிருக்காது. தேவையான மணல் மூட்டைகளை தயார் செய்தல், ஜேசிபி இயந்திரங்களை வைத்திருக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குடிசையில் வாழும் பொதுமக்கள் இரவு நேரத்தில் பாதுகாப்பான இடங்களில் தங்கிக் கொள்ள வேண்டும். தற்போது 6 முகாம்களில் சுமார் ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 233 முகாம்கள் திறக்கும் அளவிற்கு இடங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளது. இதில், சுமார் 1.80 லட்சம் பேர் தங்க வைக்க முடியும். மாவட்ட நிர்வாகம் முன்னேற்பாடு பணிகளில் முழு எச்சரிக்கையுடன் உள்ளது என்றார்.பொதுமக்கள் தங்கள் பகுதியில் மழைநீர் தேங்கியிருந்தாலோ அல்லது வேறு ஏதேனும் பேரிடர் நிகழ்ந்தாலோ 1077 என்ற எண்ணில் தொடர்புக் கொண்டு தகவல் தெரிவிக்கலாம் இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். இன்று மழை விட்ட நிலையில் மழைநீரை வெளியேற்றும் பணிகள், சாலைகள், வீடுகள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.


Tags : camps ,Kondur ,Katumannarko 6 ,Kondurmannarkoil , Cuddalore, heavy rain, gondoor, kattumannarkoil, camp
× RELATED 88 முகாம்களில் நடக்கிறது 10ம் வகுப்பு...