×

அலைமோதும் கூட்டத்தால் உயிர் பலி ஏற்படும் அபாயம்: சின்னசேலம் டெப்போவில் இருந்து காலநேரப்படி இயங்காத பேருந்துகள்

சின்னசேலம்: சின்னசேலம் பஸ் டெப்போவில் கால நேரப்படி டவுன் பஸ்கள் இயக்கப்படாததால், அலைமோதும் மாணவர் கூட்டத்தால் உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். கள்ளக்குறிச்சி அரசு டெப்போவை மையமாகக் கொண்டு கச்சிராயபாளையம், சங்கராபுரம், சின்னசேலம், தியாகதுருகம் உள்ளிட்ட வெளியூர்களுக்கு அரசு பேருந்துகள் சென்று வந்தது. மேலும் கள்ளக்குறிச்சி டெப்போ பெரிய அளவில் இருந்ததால், அப்போதைய அமைச்சர் மோகன் முயற்சியால் அதை இரண்டாக பிரித்து சின்னசேலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய டெப்போ திறக்கப்பட்டது. தற்போது இந்த டெப்போவில் இருந்து சுமார் 13 டவுன் பஸ்களும், 20 வெளியூர் பேருந்துகளும் சென்று வருகிறது. இந்த டெப்போவில் பேருந்துகளை இயக்க போதுமான அளவில் டிரைவர்கள் இருந்தபோதிலும், கண்டக்டர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் கண்டக்டர்கள் வார விடுமுறைகூட எடுக்க முடியாமல் தொடர்ந்து பணியாற்றும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சில நேரங்களில் அவர்களும் தொடர்ந்து பணியாற்ற முடியாமல் பணியில் இருந்து இறங்கி விடுவதால், அந்த பேருந்துகள் குறிப்பிட்ட ஊருக்கு செல்ல முடியாமல் நின்று விடுகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு சின்னசேலத்தில் இருந்து கச்சிராயபாளையத்திற்கு செல்லும் பேருந்திற்கு கண்டக்டர் இல்லாததால் அன்று மட்டும் 4 டிரிப் கட் ஆனது. இதனால் அரசுக்கும் வருவாய் இழப்பு ஆனதுடன், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் என பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதைப்போலவே அடிக்கடி ஒரு நாளைக்கு குறிப்பிட்ட கிராமங்களுக்கு ஓரிரு டிரிப் செல்லும் பேருந்துகள்கூட இயக்கப் படாமல் நின்று விடுகிறது.

இதனால் அந்த கிராமப்புற பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஆனால் இந்த பற்றாக்குறையை சமாளித்து நின்றுபோன பேருந்துகளை இயக்க கிளை மேலாளரோ, கன்காணிப்பாளரோ நடவடிக்கை எடுக்க வில்லை.
மேலும் சின்னசேலம் டெப்போ தளத்தில் மழையின் காரணமாக சேறும், சகதியுமாக உள்ளதால் அடிக்கடி பேருந்துகள் சேற்றில் சிக்கிக் கொள்கிறது. அதனால் பேருந்துகளை இயக்க டிரைவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அதுமட்டுமல்லாமல் பணிக்கு செல்லும் ஊழியர்கள் பைக்கில் செல்லும்போது சேற்றில் சிக்கி விழுகின்றனர். கிராவல் அடிக்க, டெப்போ கட்ட ஒதுக்கிய நிதி என்னாச்சு என ஊழியர்கள் புலம்புகின்றனர். அதைப்போல நேற்றிரவு ஊழியர்கள் இரவில் தங்கும் அறையில் மழைநீர் புகுந்துவிட்டது. கழிப்பிட வசதி என்பது அங்கு அறவே இல்லை. ஆகையால் பயணிகளுக்கும், ஊழியர்களுக்கும் பயணில்லாத டெப்போவாக உள்ளது.ஆகையால் இந்த டெப்போவை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் போதி நிதி ஒதுக்கி டெப்போ வளாகம் முழுவதும் தரைதளம் அமைக்க வேண்டும். கண்டக்டர்கள் பற்றாக்குறையை சரிசெய்து கால நேரப்படி பேருந்துகளை இயக்க வேண்டும். பழுதான பேருந்துகளை அடிக்கடி பராமரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் ெபாதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இல்லை என்றால் சின்னசேலம் அரசு டெப்போவை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர்.

மழையில் ஒழுகும் பேருந்துகள்

சின்னசேலம் டெப்போவில் இருந்து இயங்கும்  டவுன் பஸ்கள் எல்எஸ்எஸ் என போர்டு போட்டுக்கொண்டு சென்றாலும் அவையும்  சேதமடைந்துள்ளது. டவுன் பஸ்களில் பெரும்பாலும் சீட்டுகள் உடைந்தும்,  மேற்கூரை பாதிப்படைந்தும் காணப்படுகிறது. இதனால் மழை காலத்தில்  மேற்கூரையில் இருந்து மழைநீர் ஒழுகுகிறது. அதைப்போல ஜன்னல்கள் சரிவர  இயங்காததால் மழை சாரலில் பயணிகள் நனைகின்றனர். சில பேருந்துகளில் கியர்  சரிவர இயங்காமல் பாதி வழியிலேயே லாக்ஆகி நின்று விடுகிறது. கடந்த சில  மாதங்களுக்கு முன்புகூட இன்ஜின் ஒயர்கள் ஒன்றோடு ஒன்று உரசி  பஸ் இன்ஜின்  தீப்பற்றி எரிந்துள்ளது. சின்னசேலம் டெப்போவில் பேருந்துகளை பராமரிப்பது கிடையாது, மேலும் தாங்கள்  சொல்லும் குறைகளை போதுமான அளவில் நிவர்த்தி செய்வது கிடையாது டிரைவர்கள் தெரிவித்தனர்.


Tags : Deaths ,Meeting Death ,Chinasalem Depot , Livelihoods, Risk, Cinnamon Salem, Depot, Buses
× RELATED கோட்டா பயிற்சி மையத்தில் படித்த...