செங்கல்பட்டு பகுதியில் மழைவெள்ளத்தில் தவிக்கும் மக்கள்: கடலுக்கு போகும் பாலாற்று தண்ணீர்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு பகுதியில் கனமழை பெய்து வருவதால் திம்மாவரம் பகுதியில் உள்ள மகாலட்சுமி நகர், வைபவ் நகர், பாலாறு நகர் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த பகுதியில் சுமார் 5 அடி உயரத்துக்கு மழைநீர் சூழ்ந்துள்ளதால், கடந்த 2 நாட்களாக மக்கள் வீடுகளைவிட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் இருந்து வெளியேறும் உபரிநீர் நீஞ்சல்மடு அணையில் நிரம்பியுள்ளதால், கரையோர பகுதிகள் வெள்ளக் காடாக மாறியுள்ளது.
இந்த நிலையில், நீஞ்சல்மடு அணை நீரை பொதுப்பணி துறை அதிகாரிகள் பாலாற்றில் திறந்துவிட்டும் மகாலட்சுமி நகர் பகுதியில் வெள்ளநீர் வடியவில்லை. சிங்கபெருமாள் கோவில் பகுதி ஜிஎஸ்டி சாலையில் இன்று 3வது நாளாக மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. ஜிஎஸ்டி சாலை பகுதிகளில் மழைநீர் தேங்கியிருப்பதை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் நேரில் ஆய்வு செய்து, அந்த நீரை அகற்ற உத்தரவிட்டார். எனினும், இந்த சாலையில் தேங்கியுள்ள நீரை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆனால் இந்த நீர் விவசாயத்துக்கு பயன்படுத்தப்படாமல் வீணாக கடலில் கலந்துவிடுகிறது. நீர்வரத்து அதிகரிப்பால் பொன்விளைந்த களத்தூர், செங்கல்பட்டு கொளவாய் ஏரி வேகமாக நிரம்பி வருகின்றன.
செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் அருகே நீஞ்சல்மடு அணைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து உபரி மழைநீர் வருகிறது. இந்த உபரிநீர் நீஞ்சல்மடு அணையில் நிரம்பி அணை திறக்கப்பட்டு களத்தூரான் கால்வாய் வழியாக சுமார் 9 கிமீ தொலைவில் உள்ள பொன்விளைந்த களத்தூர் ஏரிக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டது. எனினும், இந்த களத்தூரான் கால்வாய் முழுவதும் தூர்ந்து உள்ளதால், நீஞ்சல்மடு அணையில் இருந்து வெளியேறும் உபரிநீர் பொன்விளைந்த களத்தூர் ஏரிக்கு செல்வதில்லை. இந்த நீர் அனைத்தும் நீஞ்சல்மடு அணையை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைவெள்ளம் சூழ்ந்துவிடுகிறது. ‘’நீஞ்சல்மடு அணையில் மழைநீர் தேக்கி வைக்க முடியாமல், பாலாற்றின் வழியே அதிகாரிகளால் திறந்துவிடப்பட்டு கடலுக்குள் வீணாக கலந்து வருகின்றனர்’’ என விவசாயிகள் கூறுகின்றனர்.

Tags : Chengalpattu ,rain water People , Chengalpattu, rain floods, people, ballast water
× RELATED செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம்