×

உள்ளாட்சி தேர்தலில் எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் மதம் மாறியவர்கள் போட்டியிட தடை கோரிய வழக்கு: ஐகோர்ட் கிளை தள்ளுபடி

மதுரை: உள்ளாட்சி தேர்தலில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் மதம் மாறியவர்கள் போட்டியிட தடை கோரிய வழக்கை உயநீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றம் தலையிட முடியாது என விளக்கமளித்துள்ளது. குமரி மாவட்டம் பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்த பைரவன் என்பவர் உயநீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்காக ஒதுக்கப்பட்ட வார்டுகளில் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதத்தில் இருந்து மதம் மாறியவர்கள் போட்டியிட தடை வேண்டும் என தாக்கல் செய்திருந்தனர். குமரி மாவட்டத்தில் காணிக்காரன் பழங்குடியின சமூகத்தினரை சேர்ந்த ராஜன் என்பவர், கிறிஸ்தவ மதத்தை பின்பற்றி வந்தார். மேலும் அவர், அந்த சமயத்தை பரப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இவர் இந்த சமயத்தை பின்பற்றும் போது, சாதிசான்றிதழை பயன்படுத்தி 1996ம் ஆண்டு முதல் தொடர்ந்து 4 முறை உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். ஆனால் சட்டப்படி ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த இந்துக்கள், கிறிஸ்தவ அல்லது இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் போது, அவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களாக அறிவிக்கப்படுகிறார்கள். இதனை பயன்படுத்தி தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டின்படி, தேர்தலில் போட்டியிடுகிறார். அவ்வாறு போட்டியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நிர்வாக நீதிபதி துரைசாமி மற்றும் ரவீந்திரன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் நீதிமன்றம் தலையிட இயலாது என்று கூறினர். மேலும், எந்தெந்த மாவட்டங்களில் பிரச்சனைகள் இருக்கிறதோ, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பார்கள் என காரணம் காட்டி வழக்கினை தள்ளுபடி செய்துள்ளனர்.

Tags : conversion ,Wards ,STs ,SCs , Local Elections, SC, ST, Conversion, Competition, Prohibition, Case, ICT Branch, High Court Madurai Branch, Discount
× RELATED சென்னையின் 200 வார்டுகளிலும்...