×

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்த விவகாரம்: நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது...வீட்டின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு!

கோவை: மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த 17 உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், சுவர் இடிந்த வீட்டின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

17 பேர் உயிரிழப்பு

மேட்டுப்பாளையம் அருகே நடூர்- ஏடிக்காலனி பகுதியில் கண்ணப்பன் லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். இவர் இவரது வீட்டை சுற்றிலும் கருங்கற்களால் ஆன 20 அடி உயர காம்பவுண்ட் சுவரை கட்டியுள்ளார். இந்த சுவரில் மழை நீர் தேங்கியதால் இதன் ஒரு பகுதி இன்று அதிகாலை 3 மணிக்கு இடிந்து அருகில் உள்ள 4 வீடுகளின் மீது விழுந்தது. இந்த விபத்தில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த 17 பேர் மண்ணில் புதைந்தனர்.

தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இந்த விபத்தில் 10 பெண்கள், இரு குழந்தைகள், 3 ஆண்கள் உள்பட 17 பேர் பலியாகிவிட்டனர். 17 பேரின் உடல்களை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. இதையடுத்து, அனைவரின் சடலங்களும் மீட்கப்பட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இதற்கிடையில், உயிரிழந்துள்ள 17 பேருக்கும் தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆட்சியர் முற்றுகை

மழைக்காலம் என தெரிந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஒரு சம்பவம் நடந்தால் மட்டுமே பாதிக்கப்பட்ட பகுதிகள் மீது அதிகாரிகள் அக்கறை கொள்கின்றனர் என்றும் குற்றம்சாட்டிய பொதுமக்களும் உறவினர்களும் 1000க்கும் மேற்பட்டோர் திரண்டனர். இவர்கள் மேட்டுப்பாளையம்- ஊட்டி நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த விபத்து நடந்த இடத்தை பார்வையிட வந்த ஆட்சியர் மற்றும் மேட்டுப்பாளையம் எம்எல்ஏ சின்னராஜ் ஆகியோரை மக்கள் முற்றுகையிட்டனர்.

கைது..

இதற்கிடையில், மருத்துவமனையை சுற்றியும் மறியல் நடைபெற்றது. அப்போது, 17 பேரில் 13 பேரின் பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் உடல்களை வாங்க மறுத்து போராடியவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வழக்குப்பதிவு

இந்த நிலையில், வீட்டு உரிமையாளர் சிவசுப்பிரமணியன் மீது விபத்தை ஏற்படுத்துதல் பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த விபத்துக்கு காரணமாக கருங்கல் சுற்றுச்சுவரை கட்டிய வீட்டு உரிமையாளருக்கு எதிராக கொலை வழக்கும் வன்கொடுமை வழக்கும் பதிவு செய்ய கோரி மக்கள் மறியல் செய்த நிலையில், உரிமையாளர் மீது வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Mathrubhumi - Wallpaper ,Mettupalayam ,highway ,Road ,Wall ,house owner ,Picketers , Mettupalayam, rain, wall collapse, owner, arrest, case, protest
× RELATED பறக்கும்படை சோதனையில் ரூ.1.17 லட்சம் சிக்கியது