×

அயோத்தி வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் ஜாமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பு சீராய்வு மனுத்தாக்கல்

புதுடெல்லி: அயோத்தி வழக்கு தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கா் நிலம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. இவ்வழக்கின் 40 நாள் விசாரணை அக்டோபர் 16ம் தேதி முடிவடைந்ததைத் தொடர்ந்து, நவம்பர் 9ம் தேதி தீர்ப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியது. அதேவேளையில் மசூதி கட்ட 5 ஏக்கர் மாற்று இடம் இஸ்லாமியர்களுக்கு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பல இஸ்லாமிய அமைப்புகள் ஏற்றுக்கொண்டன.

தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படாது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் ஒரு பிரிவினர் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்ய விரும்புவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், ஜாமியத் உலமா-இ-ஹிந்த் சார்பில் அயோத்தி வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மூல மனுதார் எம் சித்திக்கின் மகன் மௌலானா சையத் ஆசாத் ரஷிதி தாக்கல் செய்துள்ள இந்த சிராய்வு மனுவில், தீர்ப்பை சீராய்வு செய்வதோடு அயோத்தி வழக்கின் தீர்ப்புக்கு தடை விதிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக பேசிய மௌலானா சையத், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் முன்பகுதி பின்பகுதியுடன் முரண்படுவதாக உள்ளது.

உச்சநீதிமன்றம் அந்த முரண்பாடுகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்பதே எங்கள் பணிவான கோரிக்கையாகும், என தெரிவித்திருந்தார். அயோத்தி வழக்கில் முஸ்லிம்கள் தரப்பில் இடம்பெற்ற பத்து பேரில் ஒருவரான உ.பி. ஜமாத் பொதுச்செயலாளர் எஸ்.எம்.சித்திக் சில ஆண்டுகளுக்கு முன் மறைந்தார். அவருடைய இடத்தில் அவரது மகன் மௌலானா சையத் ஆசாத் ரஷிதியின் பெயர் சேர்க்கப்பட்டது. இந்நிலையில், கடந்த நவம்பர் 14ம் தேதி டெல்லியில் கூடிய ஜமாத் உலமா-இ-ஹிந்த் அமைப்பின் செயற்குழு கூட்டத்தில், அயோத்தி தீர்ப்பு குறித்தி ஆலோசிக்கப்பட்டது. இதில், 5 ஏக்கர் மாற்று நிலம் தரப்படுவதை ஏற்க முடியாது எனவும் உலகில் வேறு எதையும் மசூதிக்குப் பதிலாக ஏற்க முடியாது எனவும் இரண்டு தீர்மானங்கள் ஒரு மனதாகத் நிறைவேற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : Jamiat ,Ulama-e-Hind ,Ayodhya ,Supreme Court ,Jamiat Ulama , Ayodhya, Judgment, Supreme Court, Adjournment Motion, Jamiat Ulama-e-Hind
× RELATED இந்தியா கூட்டணிக்கே ராமரின் ஆதரவு: சமாஜ்வாடி கட்சி உறுதி