×

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகளை கொண்டு வந்தால் தங்கம், வெள்ளி நாணயம் பரிசு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த தூக்கு பைகளை கொண்டு வரும் பொதுமக்களுக்கு குலுக்கல் முறையில் தங்கம், வெள்ளி நாணயங்கள் வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத் திருவிழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை தடை செய்வதற்கு முன்பு இத்திருவிழாவிற்கு வரும் பக்தர்கள், தங்களது பூஜை சாமான்களை கொண்டு செல்லவும், பிற திண்பண்டங்கள், விளையாட்டு சாமான்களை தங்களது இடங்களுக்கு எடுத்து செல்லவும் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் தூக்கு பைகளை பயன்படுத்தி வந்தனர். அவ்வாறு பயன்படுத்தப்படும் பெரும்பாலான பிளாஸ்டிக் தூக்கு பைகள் கொண்டு செல்லும் வழியிலேயே கிழிந்து குப்பையாக மாறி கிரிவலப்பாதையிலும், திருவண்ணாமலையில் பிற இடங்களிலும் வீசிவிட்டு சென்றனர். இந்த பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து செல்வது உள்ளாட்சி துப்புரவு பணியாளர்களுக்கு பெரும் சவாலாக இருப்பதுடன், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பதாகவும் இருந்தது. எனவே இவ்வாறு உருவாகும் பிளாஸ்டிக் குப்பைகளை தவிர்க்கவும், பொதுமக்கள் பிளாஸ்டிக் கேரி பேக்களுக்கு மாற்றாக துணிப்பை, சணல்பை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பிற தூக்கு பைகளை கார்த்திகை தீபத் திருவிழாவின் போது பயன்படுத்த ஊக்குவிக்க திட்டமிட்டனர்.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் முதன் முறையாக 2013ம் ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு துணிப்பை, சணல்பை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பிற தூக்கு பைகளை எடுத்து வரும் பொதுமக்களுக்கு, குலுக்கல் முறையில் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் வழங்கும் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்து அவ்வாண்டே செயல்படுத்தியது. அவ்வாண்டு சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகளை கொண்டு வந்த பக்கதர்களுக்கு கணினி மூலம் குலுக்கல் முறையில் நபர்கள தேர்வு செய்யப்பட்டு 2 கிராம் தங்க நாணயங்களும், 10 கிராம் வெள்ளி நாணயங்களும் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின்போது தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதற்கிடையில் தமிழ்நாடு அரசு கடந்த 25.06.2018ம் தேதி ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை கடந்த 01.01.2019 முதல் தடை செய்வதாக அறிவித்தது.

இதன் பொருட்டு பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த கடந்த ஆண்டுகளை விட 2018ம் ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழாவின்போது தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களின் எண்ணிக்கையை அதிகரித்து அதாவது 6 நபர்களுக்கு தலா 2 கிராம் தங்க நாணயங்கள் மற்றும் 72 நபர்களுக்கு தலா 10 கிராம் வெள்ளி நாணயங்கள் வழங்கப்பட்டது. இந்த வருடம் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை முற்றிலும் தடை செய்யப்பட்டு இருப்பினும் பிளாஸ்டிக் தூக்கு பைகளுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த துணி மற்றும் சணல் பைகளை எடுத்து வரும் பக்தர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திரு விழாவில் 12 நபர்களுக்கு தலா 2 கிராம் தங்கம் மற்றும் 72 நபர்களுக்கு தலா 10 கிராம் வெள்ளி நாணயங்கள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகளை கொண்டு வந்து கூப்பன் பெறும் ஒவ்வொரு நபருக்கும் ஒரு துணிப்பை வழங்கப்பட இருக்கிறது. இத்திட்டம் குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்த 5000 ஸ்டிக்கர் மற்றும் துண்டு பிரசுரம் தயாரிக்கப்பட்டு அவை பொதுமக்கள் பயன்படுத்தும் பேருந்துகள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களில் ஒட்டப்பட உள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகளை கொண்டு வரும் பக்கதர்களுக்கு கூப்பன்களை வழங்குவதற்காக குபேரலிங்கம், அண்ணா நுழைவு வாயில், பெரியார் சிலைக்கு அருகாமையில் முகாம் அமைக்கப்பட உள்ளது. அவ்வாறு 3 இடங்களிலும், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் வழங்கப்படும் கூப்பன்களை சேர்த்து, கணினியில் குலுக்கல் முறையில் 3 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, 10 கிராம் வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது.

மேலும், 3 இடங்களிலும் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வழங்கப்படும் கூப்பன்களை சேர்த்து, கணினியில் குலுக்கல் முறையில் ஒரு சிறப்பு நபர் தேர்வு செய்யப்பட்டு, 2 கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட உள்ளது. மேலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகளை கொண்டு வரும் பக்தர்களுக்கு கூப்பனுடன் ஒரு இலவச துணிப்பையும் வழங்கப்பட உள்ளது. இத்திட்டம் 09.12.2019 (திங்கட்கிழமை) அன்று மாலை 6 மணி முதல் 10.12.2019 மாலை 6 மணி வரை செயல்படுத்தப்பட உள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு வரும் பொதுமக்கள், தங்களது துணிப்பை, சணல்பை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தூக்கு பையுடன் வருகை புரிந்து இத்திட்டத்தில் பங்கு கொள்ளுமாறும், திருவண்ணாமலையின் சுற்றுச்சூழலை தொடர்ந்து பாதுகாக்க முழுமையான ஆதரவு தருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Tags : Thiruvannamalai , Thiruvannamalai
× RELATED 10 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு...