நேரில் சென்று பார்த்தால் தங்கள் அணிக்கு வெற்றி: இந்திய விளையாட்டு ரசிகர்கள் நம்பிக்கை...ஆய்வில் தகவல்

டெல்லி: உலகில் எங்கு கிரிக்கெட் போட்டி நடந்தாலும் அங்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கும். இந்நிலையில், கிரிக்கெட் போட்டியின் ஆர்வம் குறித்து புக்கிங் டாட்காம் என்ற இணையதளம் கடந்த மாதம் 27-ம் தேதி ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எந்த அளவுக்கு போட்டிகள் மீது காதல் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. 42 சதவிகித இந்திய ரசிகர்கள், தங்களது ஆபீஸ் வேலையைத் தவிர்த்துவிட்டும், தங்களின் ஹனிமூன் திட்டத்தைக்கூட கேன்சல் செய்துவிட்டும் கிரிக்கெட் போட்டியை காண்பதற்கு ஆர்வம் காட்டுகின்றனர் என்ற விவரம் தெரியவந்துள்ளது.

நேரில் சென்று ஆட்டத்தைப் பார்த்தால், தங்களுக்குப் பிடித்தமான அணிக்கோ, வீரருக்கோ நிச்சயம் வெற்றி உண்டு என 88 சதவிகித கிரிக்கெட் ரசிகர்கள் நம்புகின்றனர். 79 சதவிகித கால்பந்தாட்ட ரசிகர்களும் இந்த நம்பிக்கையைக் கொண்டுள்ளனர். இதற்கிடையே, டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு பேட்டியளித்த புக்கிங் டாட்காம் இணையதள மேலாளர் ரிட்டு மெஹரோட்ரா, ரசிகர்களின் வசதிக்கேற்ற வகையில் பயணம், தங்குமிடம் எல்லாவற்றையும் சிறந்த முறையில் ஏற்பாடுசெய்து தருகிறோம். மேலும், அடுத்த ஆண்டு, மேட்ச்சுகள் ஆண்டாக இருக்கப்போகிறது என தெரிவித்துள்ளார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இறுதிப் போட்டிகளைப் பார்ப்பதற்குத் தடையாய் இருந்தால், வேலையைக்கூட தியாகம் செய்யத் தயாராய் இருப்பதாக, இந்திய ரசிகர்களில் 41 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். உலக அளவில் 19 சதவிகித ரசிகர்கள் தங்களது ஹனிமூன் பயணத்தைக்கூட ரத்து செய்துவிட்டு கிரிக்கெட் மேட்சைக் காண ஆவலாய் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இவர்களில் 42 சதவிகிதம் பேர் இந்தியர்கள் என்றார்.

டி.வி, மொபைல்களில் பார்ப்பதைவிட நேரில் சென்று பார்ப்பதையே ரசிகர்கள் பலரும் விரும்புகின்றனர். 18 வயதிலிருந்து 29 வயதுக்குள் இருக்கின்ற 22,603 இளம் ரசிகர்களிடையே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதேபோல, கிரிக்கெட்டைக் காண 86 சதவிகிதம் பேரும், கால்பந்தைக் காண 51 சதவிகிதம் பேரும், டென்னிஸ் விளையாட்டுக்கு 31 சதவிகிதமும், ஹாக்கி 23 சதவிகிதமும் மோட்டார் ஸ்போர்ட்ஸை 18 சதவிகிதமும் நேரில் சென்று பார்க்கின்றனர்.

ரசிகர்களில் 37 சதவிகிதம் பேர், தங்கள் குடும்பத்துடன் நேரம் செலவிடுவதைவிட விளையாட்டைக் காண பயணிப்பதில்தான் அதிகம் விரும்புகின்றனர். 82 சதவிகிதம் பேர் விளையாட்டைக் காண்பதற்காக அதிகபட்சம் 5 முறை வரை பயணித்துள்ளனர். அதில், பத்தில் ஆறுபேர் எதிர்வரும் காலங்களில், தங்கள் அணியின் விளையாட்டை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சென்று காண்பதற்குத் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர் என்றார்.

Related Stories:

>