×

தெலுங்கானா பெண் மருத்துவர் கொல்லப்பட்ட விவகாரம்: நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என மாநிலங்களவையில் பெண் உறுப்பினர்கள் பேச்சு!

புதுடெல்லி: நாட்டில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என மாநிலங்களவையில் பெண் உறுப்பினர்கள் பேசியுள்ளனர். தெலுங்கானாவில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை உள்ளிட்ட சம்பவங்களை குறிப்பிட்டு பெண்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள், மாநிலங்களவையில் வலியுறுத்தினர். பெண் மருத்துவரின் இழப்புக்கு அரசு சரியான பதில் சொல்ல வேண்டும் என்ற சமாஜ்வாதி கட்சியின் பெண் எம்.பி. ஜெயா பச்சன், நிர்பயா தொடங்கி எத்தனையோ சம்பவங்கள் நடந்து விட்டன.

ஆனாலும் பெண்களுக்கு எதிரான குற்றம் தொடர்கதையாகி வருகிறது. மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு என்ன பதில் சொல்லப்போகின்றன. ஐதராபாத்தில் நடந்த சம்பவம் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற குற்றவாளிகளை பொதுவெளியில் நிற்கவைத்து அடித்துக் கொல்ல வேண்டும் என ஆவேசமாக குறிப்பிட்டார். அப்போது பேசிய அதிமுக எம்.பி. விஜிலா சத்தியானந்த், குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் நாட்டில் பாதுகாப்பு இல்லை என வேதனை தெரிவித்தார். இதையடுத்து, தெலுங்கானாவில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த 4 பேரையும் இந்த மாதம் 31ம் தேதிக்குள் தூக்கிலிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இந்த விவாதத்தின்போது பேசிய அவை தலைவர் வெங்கய்யா நாயுடு, இதுபோன்ற குற்றங்களை தடுக்க போதிய சட்டங்கள் இருப்பதாகவும், அதை செயல்படுத்தும் துணிவும் நிர்வாகத்திறனும் இருந்தால் போதும் எனவும் தெரிவித்தார். சமூகத்தில் மனமாற்றம் ஏற்பட்டால் இதுபோன்ற கொடுமையை தடுத்து நிறுத்திவிடலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்நிலையில், மக்களவையிலும் இதுதொடர்பாக எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், இதற்கு பதிலளிக்காத மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாலியல் பலாத்காரம் போன்ற கொடூர குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். இதுபற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார்.


Tags : woman doctor ,Telangana ,Rajya Sabha , Telangana, Female veterinarian, Rajya Sabha, Vigila Satyanand, Jaya Bachchan
× RELATED தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிஸ்கட் தொழிற்சாலையில் தீ விபத்து..!!