×

பவானியில் ரேக்ளா போட்டி: சீறிப்பாய்ந்த குதிரை சுருண்டு விழுந்து சாவு

பவானி: பவானியில் குதிரை ரேக்ளா போட்டி நடந்தது. அமைச்சர் கருப்பணன் போட்டியை துவக்கி வைத்தார். இதில், இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த குதிரை சுருண்டு விழுந்து இறந்தது. பவானி குதிரை வண்டி மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் 21ம் ஆண்டு ரேக்ளா போட்டி நேற்று நடந்தது. ஈரோடு மாவட்டம் பவானி குதிரை வண்டி மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் 21ம் ஆண்டு ரேக்ளா போட்டி நேற்று நடந்தது. இப்போட்டி பவானி - ஆப்பகூடல் ரோட்டில் காடையம்பட்டி அருகே துவங்கியது. இந்த பந்தயத்திற்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார். பவானி - குமாரபாளையம் ஆட்டோ மற்றும் குதிரை வண்டி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் வெங்கடேசன் வரவேற்றார். தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் உள்ளூர் குதிரை, 43 இன்ச் குதிரை, 45 இன்ச் குதிரை மற்றும் பெரிய குதிரை என நான்கு பிரிவுகளின் கீழ் பந்தயம் நடந்தது. காடையம்பட்டி முதல் ஒரிச்சேரி வரை ஆப்பக்கூடல் ரோட்டில் சீறிப் பாய்ந்து சென்ற குதிரைகளை ரோட்டோரத்தில் இருபுறமும் பொதுமக்கள் நின்று ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். இப்போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த குதிரைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

போட்டியில் பங்கேற்ற குதிரை சாவு; முதலில் உள்ளூர் குதிரைகள் பிரிவில் எட்டு மைல் தொலைவுக்கு போட்டி நடத்தப்பட்டன. இதில் பங்கேற்ற குதிரைகளில் முதலாவதாக ஓடிய குதிரை அதிவேகத்துடன் சென்றது. பவானி ஆப்பக்கூடல் ரோட்டில் பெரியமோளபாளையம், எம்.ஜி.ஆர். நகர் அருகே சென்றபோது திடீரென குதிரை நிலை தடுமாறியது. இதனால் சுதாரித்துக் கொண்ட குதிரையை ஓட்டியவர் வண்டியை ஓரமாக நிறுத்த முயன்றார். அப்போது இலக்கை எட்டுவதற்கு முன் திடீரென குதிரை சுருண்டு விழுந்து உயிரிழந்தது. உயிரிழப்புக்கான காரணம் தெரியவில்லை. இதை பார்த்து கொண்டிருந்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து உடனடியாக ஜே.சி.பி. இயந்திரம் வரவழைக்கப்பட்டு ஜம்பை அருகே உள்ள கழுகு ஏரி கரையில் குதிரையை குழிதோண்டி புதைத்தனர்.

Tags : Bhavani , Rekla
× RELATED ரத்னம் விமர்சனம்