×

டிச.3, 4ம் தேதிகளில் தமிழகம் புதுவையில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் பேட்டி

சென்னை: டிச.3, 4ம் தேதிகளில் தமிழகம் புதுவையில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழையானது தற்போது வலுவாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. 17 இடங்களில் கனமழையும், 3 இடங்களில் மிக கனமழையும் பதிவாகியுள்ளது. இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது. அதேபோல், தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும் மிதமான மழை பெய்யும்.

மேலும், கோவை, நீலகிரி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, திண்டுக்கல், தேனி திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான மழை முதல் கனமழையும் பெய்யக்கூடும். அதிகபட்சமாக வெப்பநிலையாக 28 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 24 டிகிரி செல்சியசும் நிலவும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாப கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 18 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல், குன்னூரில் 13.செ.மீ, மதுராந்தகம் மற்றும் சோழவரத்தில் தலா 10 செ.மீ, செம்பரம்பாக்கம் மற்றும் கொடநாட்டில் தலா 9 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. மேலும், பெரியகுளம், செங்குன்றம், தாமரைப்பாக்கம், கொரட்டூர் ஆகிய பகுதிகளில் தலா 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது, என்று கூறியுள்ளார்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


Tags : Thunderstorms ,areas ,Balachandran ,Tamil Nadu ,Chennai Meteorological ,places ,Chennai ,Balachandran Interview ,IMD ,Pondicherry , Tamil Nadu, Tamil Nadu, Rain, Chennai Weather Center, Balachandran
× RELATED தலைகுந்தா பகுதியில் சாலையோரத்தில் புலி நடமாட்டம்: வீடியோ வைரல்