×

மடிப்பாக்கம், ஆதம்பாக்கம் பகுதிகளில் தொடர்மழை வீடுகளில் தண்ணீர் புகுந்தது

ஆலந்தூர்: சென்னை புறநகரில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஆலந்தூர், ஆதம்பாக்கம், நங்கநல்லூர், உள்ளகரம், புழுதிவாக்கம், மடிப்பாக்கம், மூவரசன்பட்டு போன்ற பகுதிகளில் நேற்று வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. சாலைகள் குளமாக மாறியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறிப்பாக ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர், மடிப்பாக்கம் ராம் நகர், சதாசிவம் நகர், பெரியார் நகர் பகுதிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. இங்குள்ள மழைநீர் கால்வாய்களை முறையாக தூர்வாராததே இதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து புகுந்தது. இதனால் காவலர்கள் பணி செய்ய முடியாமல் தவித்தனர். இங்கு வைத்திருந்த போலீஸ் ரெக்கார்டுகள் நனைந்தன. அங்கு வந்த மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் மின்மோட்டார் பொருத்தி மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுப்பட்டனர்.

கிண்டி கத்திப்பாரா மேம்பால சர்வீஸ் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். கிண்டி, வேளச்சேரி சாலை போன்ற பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆலந்தூர் கண்ணன் காலனி, மாதவபுரம் போன்ற பகுதிகளில் மழைநீர் குடியிருப்புகளில் புகுந்ததால் உடமைகள் நனைந்து நாசமானது. உள்ளகரம், மடிப்பாக்கம் வழியாக செல்லும் மேடவாக்கம் சாலை, மடிப்பாக்கம் - வேளச்சேரி செல்லும் பஜார் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கியதால், வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. புழுதிவாக்கம் பாலாஜி நகர், வடக்கு ராம்நகர் சிவபிரகாசம் நகர், ராமலிங்கம் நகர், தெற்கு ராம்நகர், குபேரன் நகர் போன்ற பகுதிகளின் சாலைகளில் தேங்கிய மழைநீர் வீடுகளில் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.


Tags : Madipakkam ,Adambakkam ,area ,rainwater houses , Madipakkam, Adambakkam area, continuous rainwater houses, water flooded
× RELATED துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு