×

சென்னை மாநகராட்சியின் சாலைகள் மறுகட்டமைப்பு உள்ளிட்ட திட்டங்களுக்கு உலக வங்கி நிதி உதவி: வாகன சாரா போக்குவரத்துக்கு முக்கியத்துவம்

சென்னை: சென்னையில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல், காற்று மாசு அதிகரித்து கொண்டே இருக்கிறது. இப்பிரச்னைக்கு தீர்வாக, சென்னையில் இயந்திர வாகனம் சாரா போக்குவரத்து திட்டத்தை சென்னை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது. இதன்படி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், சென்னையில் சைக்கிள் ஷேரிங் திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது. தற்போது, 38 சைக்கிள் ஷேரிங் நிலையங்களில் 380 சைக்கிள்கள் பயன்பாட்டில் உள்ளன. மேலும் 50 சைக்கிள் ஷேரிங் நிலையங்கள் புதிதாக அமைக்கப்பட உள்ளன. இதை தவிர்த்து நடைபாதைகளை மேம்படுத்தும் பணியும் நடந்து வருகிறது. ரூ.76 கோடி செலவில் 96 கி.மீ பேருந்து வழித்தட சாலைகளில் உள்ள நடைபாதைகள் மேம்படுத்தபட உள்ளன.

இந்நிலையில், இயந்திர வாகனம் சாரா போக்குவரத்து திட்டத்தின் கீழ், சென்னையில் உள்ள 111 கி.மீ சாலை மறுவடிவமைப்பு செய்ய சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த திட்டங்களுக்கு நிதி உதவி கோரி சென்னை மாநகராட்சி சார்பில் உதவி வங்கிக்கு அறிக்கை அளிக்கப்பட்டிருந்து. இதன் அடிப்படையில் உலக வங்கி அதிகாரிகள் கடந்த வாரம் முழுவதும் சென்னையில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் தி.நகர் நடைபாதை வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை ஆய்வு செய்தனர். அவர்களுடன் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும்  அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் சென்னை மாநகராட்சி செயல்படுத்திவரும் திட்டங்கள், மேலும் செயல்படுத்தவுள்ள திட்டங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

இது தொடர்பாக தலைமை பொறியாளர் நந்தகுமார் கூறியதாவது: சென்னை சிட்டி பார்ட்னர்ஷிப் திட்டத்தின் கீழ், சென்னையை மறு கட்டமைப்பு செய்வதற்கான திட்டங்களுக்கு உலக வங்கி நிதி உதவி அளிக்கிறது. குறிப்பாக பொது போக்குவரத்தை மேம்படுத்துதல், இயந்திர வாகனம் சாரா போக்குவரத்தை திட்டத்தை செயல்படுத்துதல் ஆகியவற்றுக்கு முக்கியதுவம் அளிக்கப்படுகிறது. இதன்படி சென்னையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபாதை வளாகம் அமைத்தல், 100 சதுர கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலைகளை மறு கட்டமைப்பு செய்தல், பேருந்து தட சாலைகளில் நடைபாதை அமைத்தல் உள்ள பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துவது தொடர்பாக அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களுக்கு தேவையான நிதியை உலக வங்கி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Chennai Corporation , Chennai Corporation, Roads Reconstruction, Non-Automobile, Transport, Importance
× RELATED திருவான்மியூர் கடற்கரையில் வானில்...