×

அண்ணாநகரில் பலத்த மழை காரணமாக மரம் விழுந்து கார் நொறுங்கியது

அண்ணாநகர்: அண்ணாநகரில் பலத்த  காற்று, மழை காரணமாக மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் கார் நொறுங்கியது. சென்னையில் நேற்று முன்தினம் இரவு விடிய  விடிய மழை கொட்டி தீர்த்தது. இதனால், அண்ணாநகர், 7வது பிரதான சாலையில் உள்ள தமிழ்நாடு  வீட்டு வசதிவாரிய குடியிருப்பு வளாகத்தில் இருந்த பழமையான மரம் வேரோடு  சாய்ந்து விழுந்தது. இதில் அப்பகுதியில்  நிறுத்தப்பட்டிருந்த சிவா என்பவரின் கார் நொறுங்கியது. தகவலறிந்து மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து  வந்தனர். மாநகராட்சி பூங்கா துறை அதிகாரி கணேசன் தலைமையில், ஊழியர்கள்  வேருடன் விழுந்த மரத்தை அறுத்து அப்புறப்படுத்தினர். பின்னர் சேதமடைந்த  காரை மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பூர்:  பெரம்பூர் சுற்றுவட்டாரத்தில், நேற்றைய நிலவரப்படி 4.9 செ.மீ., மழை பதிவானது. பலத்த காற்றில் நேற்று காலை ஜமாலியா, பெரம்பூர் நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த 20 அடி உயர மரம் வேரோடு சாய்ந்தது. அப்போது, அவ்வழியே வாகன ஓட்டிகள் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக தப்பினர். தகவலறிந்து வந்த திரு.வி.க.நகர் மண்டல அதிகாரிகள், ஓட்டேரி போலீசார், விழுந்த மரத்தை அகற்றினர்.  இதனால், அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பெரம்பூரில் இருந்து ஜமாலியா வழியாக ஓட்டேரி புரசைவாக்கம் பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் புளியந்தோப்பு வழியாக திருப்பி விடப்பட்டன இதேபோன்று ஓட்டேரி புரசைவாக்கம் ஆகிய பகுதியில் இருந்து பெரம்பூர் செல்லும் வாகனங்கள் அயனாவரம் பகுதி வழியாக திருப்பி விடப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

வீட்டின் மேற்கூரை இடிந்தது:  புளியந்தோப்பு சாஸ்திரி நகர் 7வது தெருவை சேர்ந்தவர் கோபி (22). இவர், தனது தாய் சந்திரா மற்றும் பாட்டி பாக்கியம்  ஆகியோருடன் வசித்து வருகிறார். பலத்த மழை காரணமாக நேற்று மாலை கோபி வீட்டின் மேற்கூரை மற்றும் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. அந்த நேரம் வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதில், வீட்டில் இருந்த கட்டில் மற்றும் பிரிட்ஜ் முற்றிலும் சேதமடைந்தது.


Tags : downpour ,Anna Nagar , Anna Nagar, heavy rain fell ,tree , car crashed
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை