×

விமான நிலையத்தில் கடும் பனிமூட்டம் பயணியாக வந்தவர் பைலட்டாக மாறினார்: டெல்லியில் நடந்த அரிதான சம்பவம்

புதுடெல்லி: பனி மூட்டம் அதிகமாக இருக்கும்போது, வானத்திலிருந்து தரைப்பகுதியை பார்க்கும் திறன் குறைவாக இருக்கும். இது போன்ற சூழ்நிலையில் விமானத்தை இயக்க ‘சிஏடி-3பி’ என்ற சிறப்பு பயிற்சி பெற்ற பைலட்டுகள் பணி அமர்த்தப்படுவர். டெல்லி செல்லும் விமானங்களில் டிசம்பர் மத்தியில் இருந்துதான், சிஏடி-3பி பயிற்சி பெற்ற பைலட்டுகள் பணியமர்த்தப்படுவது வழக்கம். ஆனால், நேற்று முன்தினம் காலை டெல்லி இந்திரா காந்தி சர்வவேத விமான நிலையத்தில் திடீரென பனிமூட்டம் அதிகரித்து, பார்க்கும் திறன் மிகவும் குறைவாக இருந்தது. அப்போது, புனேயில் இருந்து டெல்லி வரும் இன்டிகோ விமானத்தை (6இ-6541) இயக்க நியமிக்கப்பட்டிருந்த கமாண்டர் சிஏடி-3பி பயிற்சி பெறதாவர். அந்த விமானத்தில் பயணிகள் ஏற்றப்பட்டு டெல்லி புறப்பட தயாராக இருந்தது. அந்த நேரத்தில் சிஏடி-3பி பயிற்சி பெற்ற பைலட்டை மாற்றினால், கால தாமதம் ஏற்பட்டு பயணிகளுக்கு சிரமம் ஏற்படும்.

அதே விமானத்தில் சிஏடி-3பி பயிற்சி பெற்ற இண்டிகோ நிறுவன பைலட், பயணியாக உட்கார்ந்திருந்தார்.  இதையறிந்த நிர்வாகம், அவரை விமானத்தை இயக்க அனுமதிக்கும்படி விமான போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் திடீரென கோரியது. இதற்கான அனுமதி கிடைத்ததும், அவரிடம் பைலட்டிடம் மேற்கொள்ள வேண்டிய மது சோதனைகள் முடிக்கப்பட்டு, விமான அறைக்குள் அனுமதிக்கப்பட்டார். அவர் அந்த விமானத்தை இயக்கி டெல்லியில் தரையிறக்கினார். இந்த திடீர் முடிவால் புனேவிலிருந்து கடந்த சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம், 1 மணி நேரம் 40 நிமிடங்கள் தாமதமாக 9.10 மணிக்கு புறப்பட்டது. மூத்த பைலட்டுகள் சிலர் கூறுகையில், ‘‘சீருடை இல்லாமல் பைலட்டுகளை விமானத்தை இயக்க அனுமதித்தது மிகவும் அரிதான சம்பவம். இது பயணிகளுக்கு திகைப்பை ஏற்படுத்தலாம். இது போன்ற சூழ்நிலையில் அந்த பைலட் போதிய ஓய்வு எடுத்தாரா என்பதையும் பார்க்க வேண்டியது அவசியம்,’’ என்றனர்.


Tags : airport ,pilot ,incident ,Delhi ,passenger ,Kum Dum , airport, Kum Dum, passenger, became a pilot
× RELATED ட்ராலி பேக் வீல்களின் ஸ்குரூக்களில் தங்கம் கடத்தல்