×

உங்கள பத்தி பேசினாலே அடிப்பாங்கன்னு பயமா இருக்கு: அமித்ஷா முன்னிலையில் விமர்சித்த தொழிலதிபர்

புதுடெல்லி: ‘‘என் பெயர் ராகுல், அதை வைத்தவர் பெயர் ஜவகர்லால் நேரு. ஆனால், இந்த ரெண்டு பெயருமே உங்களுக்கு பிடிக்காது. அத்துடன் உங்களை விமர்சித்தால் தாக்கப்படுவோம் என்ற அச்சம் தொழிலதிபர்கள் மத்தியில் உள்ளது’’ என பிரபல தொழிலதிபர் ராகுல் பஜாஜ், மத்திய அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லியில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆங்கில பத்திரிகை ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில்வே மற்றும் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், தொழிலதிபர்கள் ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி,  ஆதித்யா பிர்லா குழுமத்தின் குமார மங்கலம் பிர்லா, பார்தி  எண்டர்பிரைசின் சுனில் பாரதி மிட்டல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பஜாஜ் குழுமத் தலைவர் ராகுல் பஜாஜ் பேசியதாவது: என் பெயர் ராகுல். அதை எனக்கு வைத்தவர் பெயர் ஜவகர்லால் நேரு. ஆனால், இந்த ரெண்டு பெயருமே உங்களுக்கு பிடிக்காது. முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசின் தவறுகளை பயமின்றி விமர்சித்தோம். ஆனால் உங்களை விமர்சித்தால் நாங்கள் தாக்குதலுக்கு உள்ளாவோமோ என்கிற ஒரு பயம் நிறைந்த சூழ்நிலை உள்ளது. விமர்சனத்தை வெறுக்கிறது பாஜ. மத்திய அரசை விமர்சிக்க நிறுவனங்களிடையே தைரியம் இல்லை. என்னைப் போன்ற தொழிலதிபர் நண்பர்களிடமிருந்து யாரும் பேச மாட்டார்கள். நான் வெளிப்படையாகச் சொல்வேன். ஒரு நல்ல சூழல் உருவாக்கப்பட வேண்டும்.

மத்திய காங்கிரஸ் அரசு இரண்டாவது முறையாக ஆட்சியில் இருந்தபோது கூட, ​​நாங்கள் யாரையும் விமர்சிக்க முடியும். ஆனால், தற்போது நிலைமை அப்படி இல்லை. விமர்சனங்கள்தான் ஒரு செயலை சரியான திசையில் முழுமையாக்க உதவும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், ‘‘யாரும் பயப்பட  வேண்டிய அவசியமில்லை. ஒரு குறிப்பிட்ட வகையில், சிக்கலை சரிசெய்ய  நாங்கள் முயற்சி செய்ய வேண்டியிருக்கும். பிரதமர் மோடி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்திற்கு எதிராக பல செய்தித்தாள்கள் மற்றும் கட்டுரையாளர்கள்,  ஜிடிபி சரிவு குறித்து எழுதியுள்ளனர்; தொடர்ந்து எழுதுகிறார்கள். ஆட்சிக்கு  எதிராக மிகக் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. யாரும்  பயமுறுத்தப்படவில்லை. அதனை அரசும் விரும்பவில்லை. அரசாங்கம் மிகவும்  வெளிப்படையான முறையில் செயல்படுகிறது. எந்தவிதமான எதிர்ப்பையும் பற்றி  பயமில்லை’’ என்றார்.  அமித்ஷா உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பிரபலங்கள் முன்பாக பஜாஜ் குழும தலைவர் கடுமையான விமர்சனங்களை நேரடியாக முன் வைத்து பேசியதால், இந்நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது. பல்வேறு ஆங்கிய ஊடகங்களில் இந்நிகழ்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

Tags : Amit Shah ,businessman , Amit Shah, presence, critic, businessman
× RELATED பஞ்சாப் அரசை மிரட்டுகிறார் அமைச்சர்...