×

பொது இடங்களில் பாலியல் தொல்லை அதிகம் ராஜஸ்தான், மபி.யை பெண்கள் பாதுகாப்பற்றதாக கருதுகின்றனர்

புதுடெல்லி: ‘ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களை, பெண்கள் பாதுகாப்பற்ற இடமாக உணர்கிறார்கள்,’ என ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக தன்னார்வ நிறுவனமான சேப்டி பின் என்டர்பிரைசஸ், அரசு அமைப்பான கொரியா சர்வதேச கூட்டுறவு ஏஜென்சி மற்றும் ஏசியா பவுன்டேஷன் ஆகியவற்றின் சார்பில் பெண்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு அறிக்கையில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள போபால், குவாலியர் மற்றும் ராஜஸ்தானின் ஜோத்பூர் ஆகிய இடங்களை பெண்கள் பாதுகாப்பற்றதாக உணர்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இலக்கியங்கள் மற்றும் முதன்மை ஆதாரங்கள் சேகரிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், போபால் (77), குவாலியர் (75), ஜோத்பூர் (67) என மொத்தம் 219 கணக்கெடுப்புக்கள் மூலம் இந்த ஆதாரங்கள்  சேகரிக்கப்பட்டன. இந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ராஜஸ்தான், மத்திய ப்பிரதேச மாநிலங்களில் மாணவிகள், திருமணமாகாத பெண்கள் அதிகளவில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்.

தனிமைப்படுத்தப்பட்ட அல்லது பாலைவன பகுதிகள் (65 சதவீதம்), கூட்டம் இல்லாத பொது போக்குவரத்து (63 சதவீதம்), போதைப்பொருட்கள் மற்றும் மது விற்பனை (86 சதவீதம் ), போதுமான பாதுகாப்பு இல்லாதது (86 சதவீதம்) ஆகியவற்றின் காரணமாக போபால், குவாலியர், ஜோத்பூர் உள்ளிட்ட இடங்களை பெண்கள் பாதுகாப்பற்றதாக கருதுகிறார்கள்.  பேருந்துகள், ஷேர்ஆட்டோக்களை அதிகம் பயன்படுத்தும் பெண்கள், பொது போக்குவரத்தை பயன்படுத்தும்போது அச்சுறுத்தல் மற்றும் விரும்பதகாத செயல்களுக்கு ஆளாகிறார்கள். 57.1 சதவீத மாணவிகள், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர். இதேபோல், 50.1 சதவீத திருமணமாகாத இளம்பெண்களும் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொள்கின்றனர். பொது இடங்கள் மற்றும் நெரிசல் மிகுந்த இடங்களில்தான் அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. பதில் அளித்தவர்களில் 50 ,39 சதவீதம் பேர் முறையே பொது போக்குவரத்து வாகனங்கள் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் தான் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகமாக நடப்பதாக  கூறியுள்ளனர். சாலையோரத்தில் பாலியல் துன்புறுத்தல்கள் நடப்பதாக 26 சதவீத பெண்களும், பொது வாகனங்களுக்காக காத்திருக்கையில் இதுபோன்ற இன்னலை எதிர்கொள்வதாக 16 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : sexual harassment ,places ,women ,Rajasthan ,Mabi , public places, harassment, more, rajasthan, mp women
× RELATED சென்னையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: கைதானவர் மீது குண்டர் சட்டம்