×

தமிழகம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது 11,000 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது: சுவர் இடிந்து முதியவர் பலி

கடலூர்: தமிழகம் முழுவதும் விடிய, விடிய மழை கொட்டித்தீர்த்ததால் ஏரி, ஆறுகள் நிரம்பி வழிகிறது. 11 ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.  இதனால் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை  பெய்து வருகிறது. பல பகுதிகளில் விடிய, விடிய மழை கொட்டியது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 180 மில்லிமீட்டர் மழை பெய்தது. கனமழை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.  ெநல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. பாபநாசம், சேர்வலாறு அணைகள் ஏற்கனவே நிரம்பிவிட்டதால் அணைக்கு வந்த மொத்த நீரும் அப்படியே வெளியேற்றப்பட்டது. இவற்றோடு தாமிரபரணியில் காட்டாற்று வெள்ளமும் கலந்ததால், நேற்று முன்தினம் முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 2வது நாளாக நேற்றும் தாமிரபரணியில் வெள்ளம் தணியவில்லை. ராமநதி, கடனாநதி அணைகளில் இருந்து வெளியேறிய உபரிநீரும் முக்கூடலில் தாமிரபரணி ஆற்றில் கலந்ததால், ஆற்றுப்படுகைகள் வெள்ளத்தால் சூழ்ந்திருந்தன. பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்லும் பாலத்தையும், முண்டந்துறை பாலத்தையும் மூழ்கடித்தபடியே வெள்ளம் சென்றது. நெல்லை குறுக்குத்துறை முருகன் கோயில் மண்டபம் மற்றும் கோபுரம் தொட்டபடியே வெள்ளம் சென்றது.

வீடு இடிந்து முதியவர் பலி: நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள குசவன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி (80) கூலி தொழிலாளி. வீட்டில் நேற்று முன்தினம் இரவில், இவரது மருமகள் முத்தம்மாள், பேத்தி மற்றும் கந்தசாமி ஆகியோர் தூங்கிகொண்டிருந்தனர். மழையால் குடிசை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. அப்போது கந்தசாமி, சுவரின் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து நாங்குநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மணிமுத்தாறு அணையில் நேற்று முன்தினம் 84.80 அடியாக இருந்த நீர்மட்டம்ஒரே நாளில் 10 அடி உயர்ந்தது. தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர், புளியங்குடி, சுரண்டை, ஆலங்குளம் ஆகிய இடங்களில் கனமழை பெய்தது. தூத்துக்குடி  நேற்று  முன்தினம் பெய்த மழைகாரணமாக மாநகரில் 80 சதவீத பகுதிகளை தண்ணீர்  சூழ்ந்துள்ளது. வீட்டு வாசல்களில்  நிறுத்தப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட கார்களில் தண்ணீர் புகுந்ததால்  இன்ஜின்கள் பழுதாகின.
குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணை நிரம்பியதால் 1500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வீடுகளை சூழ்ந்த வெள்ளம்: விழுப்புரம் நகரில் தாழ்வான இடங்களில் தண்ணீர் சூழ்ந்து கொண்டது. கொத்தமங்கலம், தென்குச்சிப்பாளையம், நாதன்காடுவெட்டி ஆகிய இடங்களில் ரயில்வே சுரங்கப்பாதைகளில் வெள்ளம் சூழ்ந்துகொண்டதால் அவ்வழியாக 50 கிராமங்களுக்கு செல்லமுடியாமல் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. இடைவிடாது மழையினால் மாவட்டம் முழுவதும் 1000 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

கடலூர் மாவட்டத்தில் முதுநகர், திருப்பாதிரிப்புலியூர், ரெட்டிச்சாவடி, திருவந்திபுரம், பாலூர், கோண்டூர், தேவனாம்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த தொடர்மழையால் 10 ஆயிரம் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அண்ணாநகர், வண்ணாரப்பாளையம், பாதிரிக்குப்பம் உள்ளிட்ட பல இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவந்திபுரம் குவாரியில் உடைப்பு ஏற்பட்டு மழைநீர் அருகில் உள்ள ஊருக்குள் புகுந்தது. மந்தாரக்குப்பம் அடுத்த ரோமாபுரி மேம்பாலம் அருகே சாலையின் குறுக்கே அதிகளவில் மழைநீர் செல்வதால் கடலூர்-விருத்தாசலம் சாலையில் முழுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் பேருந்திலிருந்து இறங்கி இடுப்பளவு தண்ணீரில் நடந்து செல்கின்றனர். கடலூரிலிருந்து வந்த பயணிகள் மந்தாரக்குப்பத்தில் இறங்கி தண்ணீரில் மிதந்து அடுத்த பக்கத்தில் நிற்கும் ஊ.மங்கலத்தில் நிற்கும் பேருந்தில் ஏறி சென்றனர். ஆற்றில் உடைப்பு: திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி,  முத்துப்பேட்டை பகுதிகளில் விடிய விடிய  பலத்த மழை  கொட்டியது.  வலங்கைமான் அருகே அணியமங்கலம் சுள்ளன் ஆற்றில்  உடைப்பு ஏற்பட்டது. இதனால், குடியிருப்புகளை  வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி,  ஆவுடையார்கோவில் உள்ளிட்ட இடங்களில் 168 ஏரிகள் மூலம் காவிரிப்பாசனம் நடைபெற்று வருகிறது. தொடர்மழையால் 10 ஏரிகளின் உபரிநீர் வெளியேற்றப்பட்டதால், அங்கிருந்த வந்த  தண்ணீர் எம்.ஜி.ஆர். நகர், கட்டுமாவடி  பகுதிக்குள் புகுந்தது. திடீரென்று  வெள்ளநீர் புகுந்ததால், 250 குடும்பங்கள் தவித்தன. தகவலின்பேரில் அறந்தாங்கி வருவாய்துறையினர் சென்று அவர்களை மீட்டு கட்டுமாவடி  பேரிடர் மேலாண்மை கட்டிடத்தில் தங்க வைத்தனர்.  1.20 லட்சம் மீனவர்கள்:  நாகை மாவட்டத்தில் நேற்று காலை 9 மணிக்கு கனமழை பெய்ய  தொடங்கியது.  நேரம் ஆக ஆக மழையின் தீவிரம் அதிகமானது. இடைவிடாமல் மழை  பெய்து வருவதால் சாலைகள் சேதம் அடைந்துள்ளது. மேலும் கடல் சீற்றத்தால், மாவட்டத்தில் 1   லட்சம் மீனவர்கள், கடலுக்கு செல்லவில்லை. மீனவர்கள்   கடலுக்கு செல்லாத காரணத்தால் மீன்பிடி தொழிலை சார்ந்த 50 ஆயிரத்திற்கும்   மேற்பட்டவர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. ராமேஸ்வரம், பாம்பன் உட்பட ராமநாதபுரம் மாவட்டத்தில் 40 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் 4வது  நாளாக 6,500  மீனவர்கள் கடலுக்கு  மீன்பிடிக்க செல்லவில்லை. இதேபோல், தஞ்சை மாவட்டத்தில் மல்லிப்பட்டினம்,    கள்ளிவயல்தோட்டம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த   நாட்டுப்படகு  மற்றும் விசைப்படகு மீனவர்கள் 10,000 பேர் கடலுக்கு மீன்   பிடிக்க  செல்லவில்லை. திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அருவியில் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றடைந்தனர். மேலும் காட்டாற்று வெள்ளத்தால், அமணலிங்கேஸ்வரர் கோயிலை தண்ணீர் சூழ்ந்தது. இதையடுத்து, பிரம்மா, விஷ்ணு, சிவன் கோயிலில் சாமி கும்பிட யாரும் அனுமதிக்கப்படவில்லை. சேலம், தர்மபுரி மற்றும் நாமக்கல்  மாவட்டங்களில் சாரல் மழை பெய்தது. வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஆங்காங்கே குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளன. இதேபோல், அரியலூர், பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்தது.

வீராணம் ஏரி கண்காணிப்பு
கடலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. பிரதான ஏரியான வீராணம், பெருமாள் ஏரிகளில் நீர் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதையடுத்து பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குற்றாலத்தில் 3வது நாளாக தடை
தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் நேற்றும் தண்ணீர் கொட்டியது. இதையடுத்து 3வது நாளாக மெயினருவி, ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.  களக்காடு அருகே திருக்குறுங்குடி நம்பியாற்றிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. திருமலைநம்பி கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள சப்பாத்து பாலம் வெள்ளத்தில் மூழ்கியதை அடுத்து  திருமலைநம்பி கோயிலுக்கு செல்ல நேற்று 2ம் நாளாக களக்காடு புலிகள் காப்பக  வனத்துறையினர் தடை விதித்தனர்.


Tags : Tamil Nadu ,homes ,houses , Heavy rains, Tamil Nadu floods 11,000 houses, wall collapses
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...