×

வெங்காய விலை ஏற்றம் கண்காணித்து வருகிறோம்: தட்சிணாமூர்த்தி, வேளாண்துறை இயக்குனர்

தமிழகத்தில் உணவு தானிய உற்பத்தி கடந்தாண்டு 109 லட்சம் மெட்ரிக் டன் எட்டப்பட்டுள்ளது. இந்தாண்டு 125 லட்சம் மெட்ரிக் டன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முறை கட்டாயம் இலக்கு அடைந்து விடுவோம். இதுவரை நெல் உள்ளிட்ட அனைத்து உணவு பொருட்கள் உற்பத்தி பரப்பளவும் அதிகரித்துத்தான் வந்துள்ளது. கடந்தாண்டு நெல் 13 லட்சம் எக்டேர் பரப்பளவு உற்பத்தி சாகுபடி வரை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நடப்பாண்டில் நெல் 15 லட்சம் எக்டேர் பரப்பளவு உற்பத்தி சாகுபடி செய்யப்படுகிறது. அதே போன்று அனைத்து தானியங்கள் மற்றும் காய்கறி உற்பத்தி பரப்பளவு இந்தாண்டு அதிகரிக்க வாய்ப்புள்ளது. எங்களது வேளாண்துறை அதிகாரிகள் தொடர்ந்து நேரடியாக களத்திற்கு சென்று தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். எனவே, இந்தாண்டு இலக்கை கட்டாயம் எட்டி விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழகத்தில் எந்த ஒரு விவசாய நிலத்தையும் தரிசாக விடுவதில்லை.  அப்படியே தரிசாக இருந்தாலும், அந்த  நிலங்களை விவசாய பயன்பாட்டிற்கு கொண்டு வர தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலங்களை விவசாயத்துக்கு பொண்டு வரும் வகையில் சிறப்பு கவனம் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக வேளாண்மை துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு மானியம் தருவதன் மூலம் விவசாயத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் வேளாண்துறை ஈடுபட்டு வருகிறது. உணவு தானிய உற்பத்தியை பொறுத்தவரை நமது மாநிலத்திற்கு தேவையான அளவு உற்பத்தி செய்கிறோம். அதே நேரத்தில் நமது அண்டை மாநில எல்லையோரத்தில் இங்கு வந்து பொருட்களை விற்பனை செய்வதை ஒன்றும் சொல்வதில்லை. சென்னை என்பது மிகப்பெரிய சந்தை. இங்கு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பொருட்கள் வருவதை தடுக்க முடியாது. அதே போன்று நமது மாநில விவசாயிகளும் அண்டை மாநிலங்களுக்கு சென்று பொருட்களை விற்பனை செய்கின்றனர்.
குறிப்பாக, தேனி, கோவை, நாகர்கோவில் விவசாயிகள் கேரளாவிலும், ஒசூர் பகுதியில் இருப்பவர்கள் கர்நாடகா மாநிலத்தில் உணவு தானியம் மற்றும் காய்கறி பொருட்களை விற்பனை செய்கின்றனர். மொத்தத்தில் விவசாயிகளுக்கு என்ன சவுகரியமோ அதை தான் செய்வார்கள். அவர்கள் சென்னைக்கு காய்கறி உள்ளிட்ட பொருட்களை அனுப்புவதை காட்டிலும், அது எளிது. எனவே, மாநிலங்களுக்கு இடையே பொருட்களை கொண்டு சென்று விற்பனை செய்வது சகஜம் தான்.
சந்தையில் காய்கறிகள், உணவு  தானியங்களின் விலையேறும் போது அதை அரசு கவனத்தில் கொள்கிறது. அவர்கள் உடனடியாக கூட்டுறவுத்துறை மூலம் சந்தையில் விலை அதிகரிக்கும் ேபாது அந்த பொருட்களை வாங்கி மக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்கிறது. இதற்காக, கூட்டுறவுத்துறையில் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அந்த நிதியை கொண்டு கூட்டுறவு கடைகள் மூலம் மானிய விலையில் பொருட்கள் கிடைக்க தேவையான நடவடிக்கை அரசு எடுத்து வருகிறது.

தற்போது வெங்காயம் தான் மக்களின் முக்கிய ேதவையாக உள்ளது. வெங்காயம் எல்லா வகை உணவுகளுக்கும் பயன்படுத்துவதால் அதன் விலையை கண்காணிக்க வேண்டியது அவசியம். அதே நேரத்தில் மற்ற உணவு பொருட்கள் பற்றி எந்த பிரச்னையும் இல்லை. நெல் திறந்த சந்தையில் கூட எளிதாக கிடைக்கிறது. நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் கூட நாம் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல்லை கொள்முதல் செய்து பெரும்பாலும் பொது வினியோக திட்டத்தின் கீழ் தரப்படுகிறது. மற்ற உணவு தானியங்கள் மற்றும் காய்கறி பொருட்கள் திறந்த சந்தையில் எளிதாக கிடைக்கிறது.

Tags : Dakshinamoorthy , monitoring,onion price rise,Dakshinamoorthy, Director,griculture
× RELATED தந்தை இறந்த அதிர்ச்சியில் மகன் சாவு