×

தகுதியில்லாதவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டதால் தினக்கூலி ஊழியர்கள் பட்டியலை அதிரடியாக திருப்பி அனுப்பிய அரசு: பொதுப்பணித்துறையில் மீண்டும் சர்ச்சை

சென்னை: தகுதி இல்லாதவர்களை தினக்கூலி பட்டியலில் சேர்த்து பொதுப்பணித்துறை அனுப்பிய ஊழியர்களின் பட்டியலை அரசு மீண்டும் அத்துறைக்கே திருப்பி அனுப்பியது. தமிழக பொதுப்பணித்துறையில் பாசன உதவியாளர், அலுவலக உதவியாளர், டிரைவர், துப்புரவாளர், காவலர் என பல்வேறு நிலைகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தினக்கூலி ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட தினக்கூலி ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக சட்டப்பேரவையில் கூட திமுக எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார். அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தினக்கூலி பணியாளர்களை நிரந்தரம் செய்வது தொடர்பாக பட்டியல் அரசு பரிசீலனையில் உள்ளது என்று கூறினார். இதனால், தினக்கூலி பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்த்து இருந்தனர்.

இந்த நிலையில் திடீரென 10 ஆண்டுகள் முடித்த பணியாளர்கள் பட்டியலை மீண்டும் அனுப்பி வைக்குமாறு நீர்வளப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், மண்டல தலைமை பொறியாளர்கள் 2406 தினக்கூலி ஊழியர்கள் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியலை ஆய்வு செய்ய நீர்வளப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி குழு ஒன்றை அமைத்தார். அந்த குழுவினர் பட்டியலை ஆய்வு செய்து அரசுக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால், இந்த தினக்கூலி ஊழியர்கள் பட்டியலில் குளறுபடி இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, 10 ஆண்டுகள் பணிபுரிந்து வருவதற்கான ஆவணங்கள் இல்லாத நிலையில், 500 பேர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே, இது தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழக அரசு பொதுப்பணித்துறைக்கு பட்டியலை திருப்பி அனுப்பி வைத்துள்ளது.

இது, பொதுப்பணித்துறை அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆவணங்கள் இல்லாத 500 பேரின் பட்டியலை தகுதியில்லாதவராக கருதி, அவர்களது பெயரை நீக்கி விட்டு, புதிதாக பட்டியல் ஒன்றை தயார் செய்து அனுப்பி வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பொதுப்பணித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இது குறித்து ஊழியர்கள் சிலர் கூறும் போது, பொதுப்பணித்துறையில் தற்போது, 1338 தினக்கூலி ஊழியர்கள் மட்டுமே நிரந்தரம் செய்யப்படவுள்ளனர். இந்த பட்டியலில் உயர் அதிகாரிகள் தங்களிடம் வேலை பார்த்து வரும் ஊழியர்களையும், சில உயர் அதிகாரிகள் லட்சக்கணக்கில் பணம் பெற்று கொண்டும் நிரந்தரம் செய்யும் பட்டியலில் சேர்த்துள்ளனர். இந்த ஆவணங்கள் முறையாக இல்லாததால் தான் அரசுக்கு விளக்கம் கேட்டுள்ளது‘ என்றனர்.

Tags : Government , Govt , send back daily salary,list , employees
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...