×

உங்களை விமர்சித்தால் நாங்கள் தாக்கப்படுவோம்: அமித் ஷா முன்பு பஜாஜ் தலைவர் பேச்சு...பிரபலங்களின் நிகழ்ச்சியில் பரபரப்பு

புதுடெல்லி: ‘உங்களை விமர்சித்தால் நாங்கள் தாக்கப்பட்டு விவோமா? என்ற அச்சம் தொழிலதிபர்கள் மத்தியில் உள்ளது’ என,  அமித் ஷாவை வைத்துக் கொண்டே பஜாஜ் நிறுவன தலைவர் ராகுல் பஜாஜ் பேசியது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது. டெல்லியில் நேற்றிரவு பஜாஜ் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ரயில்வே மற்றும் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், ஆர்ஐஎல் சிஎம்டி முகேஷ் அம்பானி,  ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, பாரதி  எண்டர்பிரைசஸ் தலைவர் சுனில் பாரதி மிட்டல் உள்ளிட்ட உயர்மட்ட  தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது பஜாஜ் குழுமத் தலைவர் ராகுல் பஜாஜ் பேசியதாவது: முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசின் தவறுகளை பயமின்றி விமர்சித்தோம். ஆனால் உங்களை விமர்சித்தால் நாங்கள் தாக்குதலுக்கு உள்ளாவோமோ என்கிற ஒரு  பயம் நிறைந்த சூழ்நிலை உள்ளது. விமர்சனத்தை வெறுக்கிறது பாஜ. மத்திய அரசை விமர்சிக்க நிறுவனங்களிடையே நம்பிக்கை இல்லை. எங்களை போன்ற தொழிலதிபர் நண்பர்களிடமிருந்து யாரும் பேச மாட்டார்கள். நான் வெளிப்படையாகச்  சொல்வேன். ஒரு நல்ல சூழல் உருவாக்கப்பட வேண்டும். மத்திய காங்கிரஸ் அரசு இரண்டாவது முறையாக ஆட்சியில் இருந்தபோது, ​​நாங்கள் யாரையும் விமர்சிக்க முடியும். ஆனால், தற்போது நிலைமை அப்படி இல்லை. நாங்கள் உங்களை  வெளிப்படையாக ஆதரித்தால் நீங்கள் பாராட்டுவீர்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கே இல்லை.  இவ்வாறு பேசினார்.

தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், ‘‘யாரும் பயப்பட  வேண்டிய அவசியமில்லை என்றாலும், ஒரு குறிப்பிட்ட வகையில், சிக்கலை சரிசெய்ய நாங்கள் முயற்சி செய்ய வேண்டியிருக்கும். பிரதமர் மோடி மற்றும்  தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்திற்கு எதிராக பல செய்தித்தாள்கள் மற்றும் கட்டுரையாளர்கள்,  ஜிடிபி சரிவு குறித்து எழுதியுள்ளனர்; தொடர்ந்து எழுதுகிறார்கள். ஆட்சிக்கு எதிராக மிகக் கடுமையான விமர்சனங்கள்  முன்வைக்கப்படுகின்றன. யாரும் பயமுறுத்தப்படவில்லை. அதனை அரசும் விரும்பவில்லை. அரசாங்கம் மிகவும் வெளிப்படையான முறையில் செயல்படுகிறது. எந்தவிதமான எதிர்ப்பையும் பற்றி பயமில்லை’’ என்றார்.

இக்கூட்டத்தில், கடந்த சில நாட்களுக்கு முன், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தேசிய பொருளாதார மாநாட்டில் பேசியபோது, ‘‘பல தொழிலதிபர்கள், அரசாங்க அதிகாரிகளின் துன்புறுத்தலுக்கு பயந்து வாழ்கிறார்கள். தொழில்முனைவோர்  புதிய திட்டங்களை உருவாக்க தயங்குகிறார்கள். தோல்வி ஏற்படும் என்ற அச்சத்தில் உள்ளனர்’’ என்று கூறிய விவரங்கள் மற்றும் இந்தியா இன்க் நிறுவனம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி 2019-20ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில்  இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 4.5 சதவீதமாக குறைந்துள்ளது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அதேபோல், பாஜ சர்ச்சை எம்பி பிரக்யா சிங், கும்பல் தாக்குதல் போன்ற விவகாரங்கள் குறித்தும், முக்கிய பிரபலங்கள் தங்களது கவலையை வெளிப்படுத்தினர். அமித் ஷா உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பிரபலங்கள் முன்பாக பஜாஜ் குழும  தலைவர் கடுமையான விமர்சனங்களை நேரடியாக முன் வைத்து பேசியதால், இந்நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது. பல்வேறு ஆங்கில ஊடகங்களில் இந்நிகழ்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.


Tags : Amit Shah If You Want to Be Criticized: Amit Shah , We will be attacked if you criticize: Amit Shah
× RELATED கொளுத்திய கடும் வெயிலுக்கு இடையிலும்...