×

நோய் தாக்குதலால் மகசூல் சரிவு குமரியில் அழியும் தென்னை மரங்கள்: கண்டுபிடிக்க முடியாமல் வேளாண்துறை திணறல்: மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா?

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் வெள்ளை ஈக்களின் பாதிப்பால் தென்னை விவசாயம் அழியும் நிலையில் உள்ளது. இதனை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். குமரி மாவட்டத்தில் விவசாயிகளின் முக்கிய பயிராக ரப்பர், நெல், வாழை, தென்னை விவசாயம் விளங்கி வருகிறது. ரப்பருக்கு போதிய விலை கிடைக்காததால் ரப்பர் விவசாயம் அழிவின் விழிம்பில் உள்ளது. அடுத்தப்படியாக மாவட்டத்தில் நெல் விவசாயம் விளங்கி வருகிறது. மாவட்டத்தில் ஒரு போகத்திற்கு சுமார் 5 ஆயிரத்து 500 ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பருவநிலை மாற்றத்தால், விவசாயிகள் நெல் விவசாயத்திலும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இருப்பினும் விவசாயத்தை விவசாயிகள் கைவிடாமல் தொடர்ந்து சாகுபடி செய்து வருகின்றனர்.

மாவட்டத்தில் முக்கிய பயிர்களில் தென்னை சாகுபடியும் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. மாவட்டத்தில் சுமார் 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இந்த தென்னைமரங்களில் இருந்து உற்பத்தியாகும் தேங்காய், மற்றும் தேங்காய் மட்டை, இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அன்னிய செலாவணி குமரி மாவட்டத்திற்கு வருகிறது. இந்த தென்னையை தொடர்ந்து பூச்சிகள் தாக்கி வருவதால், தென்னை மரத்தை காப்பாற்றுவதற்கு விவசாயிகள் போராடி வருகின்றனர். கடந்த காலங்களில் சிவப்பு கூன்வண்டு, காண்டாமிருகம் வண்டு, கருந்தலைபுழு, செம்பான்சிலந்தி ஆகியவற்றின் தாக்குதல் இருந்தது. இதில் சிவப்பு கூன் வண்டு தாக்குதல் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஏற்பட்டபோது, தென்னை மரங்கள் பல அழிந்து போயின. இதில் இருந்து தென்னை மரங்களை காப்பாற்றி வந்த விவசாயிகளுக்கு செம்பான் சிலந்தி மூலம் மேலும் பாதிப்பு ஏற்பட்டது.

செம்பான் சிலந்தி தாக்கும் தென்னையில் உற்பத்தியாகும் தேங்காய்கள் சொறி பிடித்து, சிறுத்து காணப்பட்டது. கடந்த சில வருடங்களாக குமரி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் தென்னை மரங்களை தாக்கும் சிவப்பு கூன்வண்டு, காண்டாமிருகம் வண்டு, கருத்தலைபுழு, செம்பான் சிலந்தி போன்றவற்றின் தாக்குதல் பெரும் அளவு குறைந்தது.  குமரி மாவட்டத்தில் தென்னை மரத்தில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதல் தற்போது அதிகமாக இருந்து வருகிறது. இந்த வெள்ளை ஈக்கள் தென்னை மரத்தின் ஓலையின் கீழ் பகுதியில் இருந்து கொண்டு, இலையின் உள்ள பச்சையத்தை உண்டு வாழ்கிறது.

மேலும் அந்த ஈக்களில் இருந்து வரும் கழிவுகள் கருப்பு நிறத்தில் திரவம் போன்று காணப்படும். இந்த திரவம் வேறு இலைகள் மற்றும் தென்னை மரத்தின் கீழ் பகுதியில் நிற்கும் வாழை உள்ளிட்ட பயிர்களின் இலைகள் மீது விழுவதால், வாழைகளின் இலைகள் அனைத்தும் கருப்பாக மாறிவிடுகிறது. தென்னையை தாக்கும் வெள்ளை ஈக்களால் தேங்காய் உற்பத்தி அடியோடு பாதிப்பு அடைந்துள்ளது. இதனால் தென்னை விவசாயம் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.  இதனை கட்டுப்படுத்த தண்ணீருடன் மைதா மாவை கலந்து, தென்னை ஓலையில் படும்படி தெளிக்கவேண்டும். மேலும் இந்த ஈக்கள் மஞ்சள் நிறத்தால் கவரப்படும். இதனால் தென்னந்தோப்பிற்குள் மஞ்சள் கவர், அல்லது மஞ்சள் அட்டையில் எண்ணெயை தடவி வைத்தால், ஈக்கள் அந்த மஞ்சள் கவரில வந்து இருக்கும்போது அதனை எளிதாக அழிக்கலாம் என வேளாண்மைத்துறை விளக்கம் அளித்துள்ளது. தென்னை மரத்தின் ஓலையின் மீது தண்ணீர் தெளிப்பது என்பது சத்தியப்படுமா என்பது கேள்விகுறியாக உள்ளது.

இது குறித்து விவசாயி செண்பகசேகரபிள்ளை கூறியதாவது: குமரி மாவட்டத்தின் சீதோஷ்ண நிலைக்கு பயிர்களை தாக்கும் பூச்சிகளின் உற்பத்தி அதிகமாக இருந்து வருகிறது. மாவட்டத்தில் முக்கிய பயிர்களான தென்னை மரத்தை ஒவ்வொரு காலநிலைக்கு ஏற்ப பூச்சிகள் தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது வெள்ளை ஈக்களின் தாக்குதல் அதிகமாக இருந்து வருகிறது. இந்த ஈக்கள் தாக்குதல் 2016ம் ஆண்டு முதல் குமரியில் இருந்து வருகிறது. இதன் தாக்குதல் செவ்விளனி தென்னை மரத்திலும, உயர் ரக தென்னை மரங்களிலும் அதிகமாக உள்ளது. இதன் தாக்கத்தால் தேங்காய் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.

குமரி மாவட்டத்தில் போதிய விலை கிடைக்காமல், ரப்பர் விவசாயம் நலிந்துள்ளது. இதுபோல் மரவள்ளி கிழக்கு பயிரில் மாவு பூச்சி தாக்குதலால் மாவட்டத்தில் மரவள்ளி கிழங்கு சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் மட்டும் சாகுபடி நடந்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது தென்னையும் இணைந்துள்ளது. தென்னையை தாக்கும் வெள்ளை ஈக்களை அழிக்க கோவை மாவட்டம் ஆழியாறு பகுதியில ‘என்கார்டியா’ என்னும் ஒட்டுண்ணி தயாரிக்கப்பட்டு வருகிறது. அங்கு செல்லும் விவசாயிக்கு தலா 10 முட்டைகள் வீதம் வழங்கப்படுகிறது. குமரி மாவட்டத்தில் இருந்து விவசாயிகள் சென்று 10 முட்டைகளை வாங்கி வரும்போது போக்குவரத்து செலவு பார்க்கும் போது அதிக அளவு பணம் செலவு செய்யவேண்டியுள்ளது. இதனால் விவசாயிள் மேலும் பாதிக்கும் நிலை இருந்து வருகிறது.

குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, திருப்பதிசாரம், தோவாளை உள்ளிட்ட பகுதியில் ஆராய்ச்சி மையங்கள் உள்ளன. இங்கு வெள்ளை ஈக்களை அழிக்கும் ஒட்டுண்ணியை தயாரிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆராய்ச்சி மையத்தில் தயாரிக்கப்படும் ஒட்டுண்ணிகளை விவசாயிகளுக்கு தேவைக்கு ஏற்ப வழங்கவேண்டும். அதுபோல் தென்னையை தாக்கியுள்ள வெள்ளை ஈக்களை அழிக்க வேளாண்மைத்துறை பரிந்துரைக்கும் கருவிகளை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கவேண்டும். குமரி மாவட்டத்தில் பூச்சிகளின் உற்பத்தி அதிக அளவு இருக்கும். ஆனால் மாவட்டத்தில் ஒரு பூச்சியியல் நிபுணர் கூட கிடையாது. மாவட்டத்தில் நிரந்தரமாக பூச்சியியல் நிபுணர்களை நியமிக்கவேண்டும். மாவட்ட கலெக்டர் வெள்ளை ஈக்களால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.

ஒட்டுண்ணி உற்பத்தி செய்ய அரசு உத்தரவு:
இது குறித்து குமரி மாவட்ட வேளாண்மைத்துறை துணை இயக்குனர் முருகேசன் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் ஓகி புயலுக்கு பிறகு வெள்ளை ஈக்களின் தாக்குதல் அதிகமாக இருந்து வருகிறது. வெள்ளை ஈக்கள் தென்னை ஓலையின் கீழ் பகுதியில் இருந்துகொண்டு பச்சையத்தை உறிஞ்சி எடுக்கிறது. இதனால் மகசூல் பாதிக்கப்படுகிறது. குமரி மாவட்டத்தில் முதலில் கிள்ளியூர், முஞ்சிறை பகுதிகளில் அதிக பாதிப்பு இருந்தது. காற்றின் மூலம் இந்த பூச்சியின் தாக்குதல் இருந்து வருகிறது. மழை பெய்யும்போதும், காற்று அதிகமாக வீசும் போதும் இதன் பாதிப்பு இருப்பது இல்லை. தென்னந்தோப்பில் வாழைகள் பயிரிடும் போது விவசாயிகள் அதிக அளவு உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துகின்றனர். இதனால் கெடுதல் செய்யும் பூச்சிகளுடன், நன்மை செய்யும் பூச்சிகளும் அழிகிறது.

இதனால் வெள்ளை ஈக்களின் பெருக்கம் அதிகரித்து வருகிறது. தற்போது ராஜாக்கமங்கலம், தோவாளை ஒன்றிய பகுதிகளில் வெள்ளை ஈக்களின் பாதிப்பு அதிக அளவு இருந்து வருகிறது. வெள்ளை ஈக்கள் மஞ்சள் கலருக்கு அதிக அளவு கவர்கிறது. இதனால் மஞ்சள் துணி, மஞ்சள் அட்டையில் வேப்பண்ணையை தடவி வைத்து வெள்ளை ஈக்களை கவர்ந்து அளிக்கலாம். கோவை மாவட்டம் ஆழியாறில் இந்த ஈக்களை அழிக்கும் ஒட்டுண்ணி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கிள்ளிகுளம் வேளாண்கல்லூரியில் வெள்ளை ஈக்களை அழிக்கும் ஒட்டுண்ணிகளை உற்பத்தி செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது என்றார்.

Tags : district administration ,Kumari ,Yojana ,Cuma Trees Destroying Yuma , Disease attack, yield decline, kumari, decaying coconut palms
× RELATED குமரி கடல் நடுவே அமைந்துள்ள...