×

குழந்தைகளை பாதுகாப்பதற்காக ஆபாச இணையதளங்களை முடக்க வேண்டும்: மாநிலங்களவையில் விஜிலா சத்யானந்த் எம்.பி. பேச்சு

நெல்லை: நாடாளுமன்ற மாநிலங்களவையில் விஜிலா சத்யானந்த் எம்.பி. பேசியதாவது:
ஆபாச இணையதளங்கள் தான் பாலியல் வன்முறை, பலாத்காரம், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நடக்க ஏதுவாகிறது. குழந்தைகள் பாதுகாப்பிற்கான தேசிய ஆணையத்தில் 5.751 குழந்தை பாலியல் வன்கொடுமைகள் புகார்கள் கடந்த 3 ஆண்டுகளில் பெறப்பட்டுள்ளன. உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரப்படி உலகளாவிய அளவில் சுமார் ஒரு கோடி குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. இணைய பரிமாற்றத்தில் 30 சதவீதம் ஆபாச வலைதளங்களே ஆக்கிரமித்துள்ளன. ஆபாச படங்கள் இணையதளங்களில் உலா வரும்போது, குழந்தைகள் ஸ்மார்ட் போனையோ, கணினியையோ பயன்படுத்துவதால் எவ்வாறு பாதுகாப்பானதாக இருக்கும். 8,9 வயது குழந்தைகள் கூட இணையதளங்களில் ஆபாச படங்களை மிக எளிதாக காண முடியும்.

பாலியல் குற்றவாளிகளை ஆராய்ந்து பார்க்கும் போது, 90 சதவீத ஆண்களும், 77 சதவீத பெண்களும் ஆபாச திரைப்படங்களை பார்த்ததால் மட்டுமே தாங்கள் இவ்வாறு மாறக் காரணம் என தெரிவிக்கின்றனர். இதனை தடுத்து நிறுத்த வேண்டும்.
மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் இதற்கான சட்டத்தை ஏற்கனவே பிறப்பித்துள்ளது. எனவே ஆபாச இணையதளங்கள் இயங்கி கொண்டு இருப்பதை அறிய முடிகிறது. இவைகளை முடக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பேசினார். இதற்கு பதிலளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நலத்துறை அமைச்சர் ஸ்மிருதிராணி, ‘‘ஆபாச இணையதளங்களை தடுக்க அரசு தக்க நடவடிக்கை எடுத்து அவைக்கு தெரிவிக்கும்.’’ என்றார்.
துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு, சட்டத்துறை அமைச்சர் ஆகியோரிடமும் ஆபாச இணையதளங்களை தடை செய்வதற்கான சட்டத்தை இயற்றவேண்டும் என்று விஜிலா சத்யானந்த் வலியுறுத்தினார்.

Tags : children ,Rajya Sabha ,Vigila Satyanand MP ,speech , Vigila Satyanand MP for Vigilant Web Site Speech
× RELATED உலகில் 8ல் ஒரு குழந்தை ஆன்லைன் மூலமாக...