×

ராதாபுரத்தில் கருத்து கேட்பு கூட்டம் பணகுடி கிராமங்களை சூழலியல் அதிர்வு மண்டலமாக அறிவிக்கக் கூடாது: ஞானதிரவியம் எம்பி, அப்பாவு கடும் எதிர்ப்பு

ராதாபுரம்: பணகுடி பகுதி கிராமங்களை சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலமாக அறிவிக்கக்கூடாது என ராதாபுரத்தில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் ஞானதிரவியம் எம்பி, முன்னாள் எம்எல்ஏ அப்பாவு எதிர்ப்பு தெரிவித்தனர். குமரி மாவட்டத்தின் வனப்பகுதிகள் கன்னியாகுமரி வன உயிரின சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சரணாலயத்தை சுற்றிலும் சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என சுற்றுச்சூழல் சட்டம் கூறுகிறது. இதன்படி வனப்பகுதிக்கு அருகில் மக்கள் வாழும் பகுதிகள் சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலமாக அறிவிக்கப்பட உள்ளது. சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலப் பகுதியில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை முறைப்படுத்துவதும், அதனால் சரணாலய பகுதிக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதும் மண்டலத்தின் நோக்கமாகும்.

கன்னியாகுமரி வன உயிரின சரணாலயத்தின் சூழலியல் அதிர்வு தாங்கு மண்டல உத்தேச எல்லையில் நெல்லை மாவட்டத்தின் பழவூர் கருங்குளம், லெவிஞ்சிபுரம், பணகுடி ஆகிய 4 கிராமங்கள் சேர்க்கப்பட உள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்  ராதாபுரம் பஞ். யூனியன் அலுவலகத்தில் கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் நடந்தது. ராதாபுரம் தாசில்தார் செல்வன் வரவேற்றார். கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ அப்பாவு பேசுகையில், சூழ்நிலை அதிர்வு தாங்கு மண்டலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள கிராமங்கள் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவையாகவும், வனப்பகுதிகள் குமரி மாவட்ட வன அதிகாரிகளின் கட்டுபாட்டிலும் உள்ளன. இந்த வருவாய் கிராமங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையின் தெற்கு மலைப் பகுதியை ஒட்டியே அமைந்துள்ளன.

மேற்கு தொடர்ச்சி மலைக்கும் தென்மலைக்கும் இடையே ஆரல்வாய்மொழி கணவாய் அமைந்துள்ளது. இந்த கணவாய் வழியாக தான் நெல்லை மாவட்டத்தை குமரி மாவட்டத்தோடு இணைக்கும் நெடுஞ்சாலைகளும், இருப்புப்பாதைகளும் உள்ளன. எனவே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலிருந்து தென்மலைப்பகுதிக்கு எந்த ஒரு உயிரினமும் வந்து செல்ல வாய்ப்பில்லை. எனவே தெற்கு கருங்குளம், பணகுடி, லெவிஞ்சிபுரம், பழவூர் கிராமங்களை வன உயிரின சரணாலயத்திற்குள் அறிவிக்க வேண்டிய அவசியமில்லை.

வனப்பகுதி சூழ்நிலை தாங்கு மண்டலமாக அறிவித்தால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் அழிந்துவிடும். இந்த அறிவிப்பில் 38 நிபந்தனைகளை நடைமுறைபடுத்தினால் இப்பகுதி விவசாயம் முற்றிலும் அழிந்து விடும். சத்தியமங்கலம் வனப்பகுதிகள் மற்றும் கேரள வனப்பகுதிகளில் இத்தகைய திட்டத்திற்கு விலக்கு அளிக்கபட்டுள்ளது. அதுபோல இந்த பகுதிகளுக்கும் விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதே கருத்தை ஞானதிரவியம் எம்பியும்  வலியுறுத்தினார். கூட்டத்தில் பல விவசாயிகள்  எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர்.

மக்கள் கருத்துகளின் அடிப்படையில் சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலத்திற்கு  எல்லை நிர்ணயிக்கப்பட்டு மத்திய அரசிற்கு பிரேரணை அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் குமரி மாவட்ட வன அலுவலர் ஆனந்த், சப் கலெக்டர் பிரதீப் தயாள், வள்ளியூர் ஏஎஸ்பி ஹரிகிரன் பிரசாத், காவல்கிணறு நீர்ப்பாசன சங்க தலைவர் ராமராஜன், பணகுடி பிரங்கிளின் சங்கர், முன்னாள்  பஞ். தலைவர்கள் ஆவரைகுளம் பாஸ்கர், தெற்குகள்ளிகுளம் ஜோசப் பெல்சி, சமுகை முரளி மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.


Tags : opinion meeting ,Radhapuram ,villages , Radhapuram, Censorship Meeting, Dhanakudi Village, Ecological Vibration Zone
× RELATED திருப்பத்தூரில் 14 கிராமங்கள் தேர்தல் புறக்கணிப்பு